விளையாட்டு

"நான் பவுலிங் போட்டா கோலி அவுட் ஆகிடுவார்"-ஷோயப் அக்தர்

"நான் பவுலிங் போட்டா கோலி அவுட் ஆகிடுவார்"-ஷோயப் அக்தர்

jagadeesh

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை தன் பவுலிங் மூலம் எளிதாக அவுட்டாக்கிவிட முடியும் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஷோயப் அக்தர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர் ஒரு காலத்தில் உலகிலேயே அதிவேகமாக பந்துவீசக் கூடியவராக அறியப்பட்டவர். பல முன்னணி பேட்ஸ்மேன்களை தன்னுடைய வேகப்பந்தால் ஆட்டமிழக்க செய்திருக்கிறார். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஒய்வுப் பெற்ற பின்பு கிரிக்கெட் வர்ணனையாளராக இருந்து வருகிறார். மேலும், தன்னுடைய யூடியூப் சேனலில் பல்வேறு விஷயங்கள் தொடர்பான கருத்துகளை கூறி வருகிறார்.

கிரிக்கெட் வர்ணனையாளரான கவுரவ் குப்தா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல்வேறு கிரிக்கெட் வீரர்களுடன் உரையாடி வருகிறார். அப்போது விராட் கோலியை அவுட் செய்வது குறித்து ஷோயப் அக்தரிடம் கேள்வி கேட்டுள்ளார் அதற்கு பதிலளித்த அவர் " விராட் கோலிக்கு ஒருவேளை நான் பந்துவீசினால், பவுலிங் கிரீஸை முழுவதுமாக பயன்படுத்தி பந்து வீசுவேன். அப்போது பந்து ஸ்விங் ஆகி ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும்; அந்தப் பந்தை கோலியால் அடிக்க முடியாது. அப்படியும் அவர் அவுட்டாகவில்லை என்றால் 150 கி.மீ. வேகத்தில் பந்தை வீசி அவுட்டாக்குவேன்" என தெரிவித்துள்ளார்.

அக்தரின் கருத்து குறித்து கோலியிடம் கேட்டபோது, அதற்கு அவர் "நான் இதுவரை ஷோயப் அக்தரின் பந்துவீச்சில் விளையாடியதில்லை. ஆனால் இலங்கையின் தம்புலாவில் நடைபெற்றப் போட்டியில் அவர் பவுலிங் போடுவதை நேரில் பார்த்துள்ளேன். அந்தப் போட்டியில் நானும் விளையாடினேன், ஆனால் அவர் பந்துவீச்சை எதிர்கொள்ளவில்லை. அவுட்டாகவுமில்லை. ஆனால் அவரின் வேகம் என்னை வியக்க செய்தது. அப்படியொரு வேகத்தில் வரும் பந்து பேட்ஸ்மேனின் உடம்பில் பட்டால் என்னாகும் என்பதை சிந்தித்தேன்" என்றார் அவர்