ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் சதமடித்து அசத்தினார். பெங்களூரு சின்னாசாமி ஸ்டேடியத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 87 பந்துகளில் 100 ரன்களை அடித்தார். ஆப்கான் அணியின் ரஷீத் கான் மற்றும் முஜூபுர் ரஹ்மானின் சுழற் பந்துகளை நாலா புறமும் சிதறடித்தார் தவான். 96 பந்துகளில் 107 ரன்கள் எடுத்து அவர் ஆட்டமிழந்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் தவானுக்கு இது 7வது சதம் ஆகும்.
ஆப்கான் அணி டெஸ்ட் போட்டியில் விளையாட அண்மையில் ஐசிசி அனுமதியளித்தது. இதனையடுத்து தங்களது வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் டெஸ்ட்டை இந்தியாவுடன் இன்று தொடங்கினார். இப்படிபட்ட ஒரு டெஸ்ட் போட்டியில் ஷிகார் தவான் முக்கியமான ஒரு மைல்கல்லை எட்டியுள்ளார். உணவு இடைவேளைக்கு முன்பாகவே அவர் சதம் அடித்தது தான் அந்த மைல்கல். இந்திய அளவில் தவான் தான் முதல் வீரர் என்பது அவருக்கு சாதனை. இதற்கு முன்பாக முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக் 2006ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் 75 பந்துகளில் 99 ரன்கள் எடுத்து நூலிழையில் தவறவிட்டார்.
தவானுக்கு முன்பாக 5 பேர் இந்தச் சாதனையை படைத்துள்ளனர். தவான் 6வது நபர். இதற்கு முன்பாக 2017ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் இந்த மைல்கல்லை எட்டி இருந்தார். முதன் முதலாக இந்தச் சாதனையை ஆஸ்திரேலிய வீரர் விக்டர் ட்ரம்பர் 1902ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் நிகழ்த்தினார்.
உணவு இடைவேளைக்கு முன்பு சதம் அடித்த வீரர்கள்:-
விக்டர் ட்ரம்பர் (ஆஸ்திரேலியா) - 1902
சார்லி மகர்ட்னே (ஆஸ்திரேலியா) - 1921
டான் பிராட்மேன் (ஆஸ்திரேலியா) - 1930
மஜித் கான் (பாகிஸ்தான்) - 1976
டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா) - 2017
ஷிகர் தவான் (இந்தியா) - 2018