ஷீத்தல் தேவி படைத்த சாதனை x
விளையாட்டு

இந்திய வரலாற்றில் ஒரே ஆள்.. மாற்றுத்திறனாளி வீராங்கனை ஷீத்தல் தேவி படைத்த புதிய சாதனை!

வில்வித்தையில் புதிய சாதனை படைத்தார் இந்திய மற்றுத்திறனாளி வீராங்கனை ஷீத்தல் தேவி..

ரா.ராஜா

மாற்றுத்திறனாளி வீராங்கனை ஷீத்தல் தேவி, தென்கொரியாவில் நடக்கும் உலகப் பாரா வில்வித்தைப் போட்டியில் தனிநபர் பிரிவில் தங்கம் வென்று அசத்தினார். அதைத்தொடர்ந்து ஜெட்டாவில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை ஸ்டேஜ் 3 ஜூனியர் பிரிவில், சாதாரண வீரர்களைக்கொண்ட இந்திய அணியில் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார்..

இந்தியாவை சேர்ந்த இளம் வில்வித்தை நாயகி ஷீத்தலின் சாதனைகள் அனைவரையும் விழியுயர்த்தச் செய்கிறது . இதயம் பொங்க கைதட்டி, கரகோஷம் எழுப்பி அவரை பாராட்ட இந்த தேசமே காத்திருக்கிறது.

முகத்தில் புன்னகை பூக்க களத்தில் இறங்கும் 18 வயதான ஷீத்தல் தேவியின் வெற்றிகள் அத்தனை எளிதானல்ல. தனது காலால் வில்லைப் பிடித்து, வாயால் நாணை இழுத்து அவர் அம்பை எய்தும் காட்சியைக்காண கோடி கண்கள் வேண்டும். ஷீத்தல் தேவிக்கு கைகள் இல்லை என்றாலும், வில்வித்தையில் தனது ஆர்வத்தைத் தொடர மற்ற உறுப்புகள் மற்றும் தன்னால் இயன்ற வழிகளைப் பயன்படுத்துகிறார். குறுகிய காலத்தில் வியக்கத்தக்க வெற்றிகளைக் குவித்துவரும் இந்த மாற்றுத்திறனாளி வீராங்கனை, தற்போது மலைக்க வைக்கும் வகையில் மற்றுமொரு சாதனைப் படைத்தார்.

ஷீத்தல் படைத்த சாதனை..

அடுத்த மாதம் ஜெட்டாவில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை ஸ்டேஜ் 3 ஜூனியர் பிரிவில், சாதாரண வீரர்களைக்கொண்ட இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். இவ்வாறான பெருமையை பெறும் நாட்டின் முதல் மாற்றுத்திறனாளி வில்வித்தை வீராங்கனை ஆனார். காஷ்மீரின் கிஷ்த்வார் பகுதியைச் சேர்ந்த ஷீத்தல், ஃபோகோமெலியா என்ற அரிய பிறவிக் குறைபாட்டால் கைகள் இன்றிப் பிறந்தவர். இரு கைகளும் இல்லாத போதும், ஷீத்தல் தேவி தனது கால்களையே கைகளாகப் பயன்படுத்தி வில்வித்தையில் களமிறங்கினார். அவரது திறமையைக் கண்டு பார்வையாளர்கள் மட்டுமல்ல, சக போட்டியாளர்களும் வியந்து நின்றனர்.

ஜம்முவில் உள்ள கத்ராவில் இருந்து பாட்டியாலாவுக்குச் சென்று, புகழ்பெற்ற பயிற்சியாளர் கௌரவ் சர்மாவிடம் பயிற்சி பெறத் தொடங்கினார். சாதாரண வில்லாளர்களுடன் போட்டியிடும் தனது நாயகியான துருக்கியைச் சேர்ந்த ஓஸ்னூர் கியூர் கிர்டி (Oznur Cure Girdi)-ஐப் போலவே தானும் இருக்க வேண்டும் என்பதில் அவர் மிகத் தெளிவாக இருந்தார். அந்தக்கனவு இப்போது கைகூடியிருக்கிறது. ஏற்கெனவெ கடந்த 2023-ஆம் ஆண்டு ஆசியப் பாரா விளையாட்டுப் போட்டிகளில் தனிநபர் மற்றும் கலப்பு அணிகள் பிரிவுகளில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றிருக்கிறார்.

மேலும், பாரிஸ் 2024 பாராலிம்பிக்கில் வெண்கலம் வென்று, இந்தியாவின் இளைய பாராலிம்பிக் பதக்கம் வென்றவர் ஆனார். அன்மையில் தென்கொரியாவில் நடக்கும் உலகப் பாரா வில்வித்தைப் போட்டியிலும் தனிநபர் பிரிவில் பதக்கம் வென்று, இரு கைகள் இன்றி இச்சாதனையைப் படைக்கும் முதல் வீராங்கனை என்ற அற்புதத்தை ஷீத்தல் தேவி நிகழ்த்தியுள்ளார்.