ஜூனியர் உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி, அபார வெற்றி பெற்றுள்ளது.
19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடந்து வருகிறது. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை நேற்று எதிர்கொண்டது. டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி, 7 விக்கெட் இழப்புக்கு 328 ரன்கள் குவித்தது.
கேப்டன் பிருத்வி ஷா 94 ரன்கள் குவித்து, 6 ரன்னில் சதத்தை தவறவிட்டார். மன்ஜோத் கர்லா 86 ரன்களும் சுபம் கில் 54 பந்தில் 63 ரன்களும் குவித்தனர். பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 42.5 ஓவர்களில் 228 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து 100 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணியின் எட்வர்ட்ஸ் அதிகபட்சமாக 73 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் சிவம் மவி, நாகர்கோடி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.