விளையாட்டு

2 மாதத்திற்குப் பின் கிரிக்கெட் பயிற்சி : மகிழ்ச்சியில் தகூர்

2 மாதத்திற்குப் பின் கிரிக்கெட் பயிற்சி : மகிழ்ச்சியில் தகூர்

webteam

2 மாதத்திற்குப் பின்னர் மைதானத்தில் கிரிக்கெட் பயிற்சி செய்தது மகிழ்ச்சி அளிப்பதாக இந்திய அணியின் வீரர் ஷர்துல் தகூர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பொது முடக்கம் காரணமாக கடந்த 2 மாதங்களாக இந்தியாவில் கிரிக்கெட் உள்ளிட்ட அனைத்து விளையாட்டுகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதற்கான பயிற்சிகளும் மேற்கொள்ளப்படாமல் இருந்தது. இந்நிலையில் 4வது முறையாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டபோது, பல்வேறு தளர்வுகளும், பல விஷயங்களில் மாநில அரசுகளே அனுமதியை வழங்கிக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, மகாராஷ்டிராவில் சிகப்பு மண்டலம் தவிர மற்ற இடங்களில் தேசிய விளையாட்டு வீரர்கள் முறையான பாதுகாப்புகளுடன் பயிற்சி எடுக்க அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து மகாராஷ்டிராவின் பல்கார் மாவட்டத்தில் உள்ள தலுகா விளையாட்டு சங்கம் தங்களது பயிற்சியைத் தொடங்கியது. மும்பையில் இருந்து 110 கி.மீட்டர் தொலைவில் உள்ள இந்தச் சங்கத்தின் மைதானத்தில் இன்று இந்திய அணியின் பந்துவீச்சாளர் ஷர்துல் தகூர் பயிற்சி எடுத்தார்.

பயிற்சி எடுக்க வந்த வீரர்கள் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்ட தங்களின் சொந்த பந்துகளை கொண்டு வந்திருந்தனர். அவ்வாறு கொண்டு வரப்பட்ட பந்துகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன. அத்துடன் வீரர்களின் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே மைதானத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். பார்வையாளர் யாரும் அனுமதிக்கப்படவில்லை. மேலும் பாதுகாப்பிற்காக பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டிருந்தன.

இரண்டு மாதங்களுக்குப் பின்னர் பயிற்சி எடுத்தது தொடர்பாக பேசிய தகூர், “2 மாதங்களுக்குப் பின்னர் இன்று பயிற்சி செய்துள்ளோம். இது மிகவும் நன்றாக மற்றும் மகிழ்ச்சி அளிக்கும் விதமாக இருந்தது” என்றார்.