விளையாட்டு

“இது சிஎஸ்கே, இதை நாம செய்யணும்” - வாட்சனுக்கு புரிய வைத்த தோனி

“இது சிஎஸ்கே, இதை நாம செய்யணும்” - வாட்சனுக்கு புரிய வைத்த தோனி

webteam

2018ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் நடந்த அனுபவத்தை ஷேன் வாட்சன் பகிர்ந்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கடந்த சில வருடங்களாக விளையாடி வருபவர் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன். இவர் முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் 2008ஆம் ஆண்டு முதல் விளையாடி வந்தார். தற்போது சென்னை அணியில் இருக்கும் இவர், நடப்பு ஐபிஎல் போட்டியிலும் விளையாடவுள்ளார். தற்போது துபாயில் சென்னை அணியினருடன் தங்கியிருக்கிறார்.

இந்நிலையில் அவர் தனது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அனுபவங்களை பகிர்ந்துள்ளார். வாட்சன் கூறும்போது, “ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடியதை நான் பெரிதும் விரும்பினேன். அது ஒரு மறக்கமுடியாத அனுபவம். ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடியது ஒரு ஆச்சர்யமான அனுபவம். அதுவும் தோனி போன்ற ஒரு தலைமையில் விளையாடியது வேறு விதமான அனுபவம். இதை நான் எனது அதிர்ஷ்டமாக நினைக்கிறேன்” என்றார்.

அத்துடன், “2018ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஒரு போட்டியை என்னால் மறக்கவே முடியாது. அன்று 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை இருந்தது. சென்னை அணி 84 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அப்போது களமிறங்கிய டிவைன் பிரவோ, 30 பந்துகளில் 68 ரன்களை விளாசினார். சென்னை அணி வென்றது. அப்போது எனது அருகே துணை பயிற்சியாளர் மைக்கெல் ஹஸ்ஸி மற்றும் தோனி இருந்தனர். என்னிடம் பேசிய தோனி, இது சிஎஸ்கே, நாம் இதை தான் செய்ய வேண்டும், எப்போது ஆட்டத்தை இழந்துவிட்டோம் என்ற நிலை சிஎஸ்கேவிற்கு கிடையாது என்றார்” என வாட்சன் தெரிவித்தார்.