ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னேவுக்கு சொந்தமான மதுபான ஆலையில் "ஜின்" தயாரிப்பு நிறுத்தப்பட்டு, கை கழுவும் சானிடைஸர்கள் தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
உலகளவில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இதுவரை 11 ஆயிரம் பேர் இறந்துள்ளனர். இதில் அதிகபட்சமாக இத்தாலியில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும், சீனாவில் 3200க்கும் மேற்பட்டோரும் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை 4 பேர் கொரோனா பாதிப்புக்கு காரணமாக பலியாகியுள்ளனர். ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இதுவரை ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் அங்கேயும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த கையை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கையை சுத்தம் செய்ய பயன்படும் சானிடைஸர்களின் தேவை அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் சுழற்பந்துவீச்சு ஜாம்பவான் ஷேன் வார்னே, தன்னுடைய மதுபான ஆலையில் "ஜின்" தயாரிப்பதை நிறுத்திவிட்டு, சானிடைஸர் தயாரிக்கும் பணியை தொடங்கியுள்ளார்.
கரோனா வைரஸ் தீவிரம் அடைந்து வரும் நிலையில், போா்க்கால அடிப்படையில் மாஸ்க், சானிடைசா்களை தயாரிக்க உள்ளூா் நிறுவனங்களுக்கு ஆஸ்திரேலிய பிரதமா் அழைப்பு விடுத்தாா். இதையடுத்து ஷேன் வாா்னே தனது மதுபான ஆலையில் ஜின் உற்பத்தியை நிறுத்தி விட்டு, மருத்துவமனைகளுக்கு உதவும் 70 சதவீதம் ஆல்கஹால் கலந்த சானிடைசா்களை உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளாா். இது குறித்து பேதிய அவர் " ஆஸ்திரேலியா தற்போது சவாலை சந்தித்து வருகிறது. சுகாதாரத் துறைக்கு உதவும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது" என்றாா்.