விளையாட்டு

“போதும் சாமி போதும்” - அம்பயரின் முடிவினால் அதிருப்தி அடைந்த ஷேன் வார்ன்

EllusamyKarthik

நம் ஊர் ஐபிஎல் தொடர் போல ஆஸ்திரேலியாவில் பிக் பேஷ் லீக் தொடர் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அண்மையில் நடந்து முடிந்த போட்டியில் அம்பயரின் தவறான முடிவை கண்டு கடும் அதிருப்தி அடைந்துள்ளார் ஷேன் வார்ன். 

ஐபிஎல் போலவே 8 அணிகள் இந்த தொடரிலும் விளையாடுகின்றன. நேற்று முன்தினம் நடைபெற்ற 13வது லீக் ஆட்டத்தில் அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணியும், பிரிஸ்பேன் ஹீட் அணியும் காபா மைதானத்தில் விளையாடின. இந்த போட்டியை வர்ணனையாளராக தொகுத்து வழங்கினார் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஷேன் வார்ன். 

முதலில் பெட் செய்த அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி இருபது ஓவர்களில் 150 ரன்களை குவித்தது. அந்த இலக்கை விரட்டியது பிரிஸ்பேன் அணி. பவர்பிளேயிலேயே மூன்று விக்கெட்டை இழந்து தடுமாற நம்பிக்கை கொடுக்கும் விதமாக விளையாடினார் வலது கை பேட்ஸ்மேனான டாம் கூப்பர். 24 பந்துகளில் 22 ரன்களை அவர் குவித்திருந்தார்.

அப்போது டேனி பிரிக்ஸ் வீசிய ஆட்டத்தின் 12 வது ஓவரின் இரண்டாவது பந்தை சுவிட்ச் ஹிட் முறையில் விளையாட முயன்ற டாம் பந்தை மிஸ் செய்தார். இருப்பினும் பந்து பெட்டில் பட்டது. ஆனால் அதற்கு அம்பயர் LBW முறையில் அவுட் கொடுக்க வர்ணனையாளராக இருந்த ஷேன் வார்ன் “அம்பயரிங் விஷயத்தில் என்ன தான் நடக்கிறது. ஏதேனும் ஒன்று செய்தாக வேண்டும். இது மாதிரியான நிறைய தவறுகளை நாம் பார்த்து விட்டோம். போதும் சாமி போதும்” என தெரிவித்தார். இந்த ஆட்டத்தில் அடிலெய்ட் அணி இரண்டு ரன் வித்தியாசத்தில் வென்றது.