விளையாட்டு

'ஷேன் வார்னேவை காப்பாற்ற நண்பர்கள் போராடினர்' - தாய்லாந்து காவல்துறை தகவல்

Veeramani

தாய்லாந்தில் விடுமுறைக்காக சென்றபோது மாரடைப்பால் பாதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னேவை காப்பாற்ற அவரது நண்பர்கள் 20 நிமிடங்கள் போராடியதாக தாய்லாந்து காவல்துறை தெரிவித்துள்ளது.

52 வயதான ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னே மற்றும் மூன்று நண்பர்கள் விடுமுறைக்காக தாய்லாந்து நாட்டின் கோ சாமுய் நகரில் உள்ள ஒரு தனியார் வில்லாவில் தங்கியிருந்ததாகவும், வார்னே இரவு உணவிற்கு வராததால், அவரின் நண்பர் ஒருவர் பார்க்க சென்றபோது ஷேன் வார்னே மாரடைப்பால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.

இது தொடர்பாக பேசிய போ புட் காவல்துறை அதிகாரி சாட்சாவின் நக்முசிக், "உடனடியாக அவரது நண்பர் அவருக்கு இதய புத்துயிர் முதலுதவி (சிபிஆர்) சிகிச்சை செய்து ஆம்புலன்ஸை அழைத்தார். அதன்பிறகு ஒரு அவசரகால மருத்துவ குழு வந்து 10-20 நிமிடங்களுக்கு மற்றொரு சிபிஆர் செய்தது.

பிறகு தாய் சர்வதேச மருத்துவமனையிலிருந்து ஒரு ஆம்புலன்ஸ் வந்து அவரை அங்கு அழைத்துச் சென்று அவருக்கு ஐந்து நிமிடங்கள் மீண்டும் சிபிஆர் செய்தார்கள், ஆனால் பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். மரணத்திற்கான காரணம் அவர்களுக்குத் தெரியவில்லை, ஆனால் அதை சந்தேகத்திற்குரியதாகக் கருதவில்லை, " என்று தெரிவித்தார்

இதுபற்றி பேசிய ஆஸ்திரேலியாவின் வெளியுறவுத்துறை மந்திரி மரிஸ் பெய்ன், தாய்லாந்தில் உள்ள வார்னின் நண்பர்களுடன் அதிகாரிகள் பேசியதாகவும், மேலும் உதவி வழங்குவதற்காக சனிக்கிழமையன்று கோ சாமுய்க்கு அவர்கள் செல்வதாகவும் கூறினார்.