விளையாட்டு

பஞ்சாப்புக்கு ஷாக் கொடுத்தது ஐதராபாத்: அஸ்வின் ஏமாற்றம்!

பஞ்சாப்புக்கு ஷாக் கொடுத்தது ஐதராபாத்: அஸ்வின் ஏமாற்றம்!

webteam

ஐதராபாத் அணியின் சிறப்பான பந்துவீச்சால் பஞ்சாப் அணி நேற்று பரிதாபமாகத் தோல்வியைத் தழுவியது. 

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 25-வது லீக் ஆட்டத்தில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் நேற்று மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வின், பீல்டிங்கை தேர்ந்தெடுத்தார். பிட்சில் புற்கள் வளர்ந்திருந்ததால் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என நினைத்து பீல்டிங்கை அஸ்வின் தேர்ந்தெடுத்திருக்கலாம். அவர் நினைத்ததுதான் நடந்தது. 

ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் வில்லியம்சன், தவான் களமிறங்கினர். முதல் ஓவரிலேயே ராஜ்புத் வீசிய பந்தை அடித்த வில்லியம்சன், அஸ்வினிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். பின்னா் தவானுடன், விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா இணைந்தார். பஞ்சாப் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இருவரும் திணறினர். மூன்றாவது ஓவரில் ராஜ்புத் வேகத்தில் கருண் நாயரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் தவான். அடுத்து சஹா 6 ரன்னில் அவுட் ஆக, தடுமாறிக்கொண்டிருந்த அணியை காப்பாற்ற, மணீஷ் பாண்டேவும் ஷகிப் அல் ஹசனும் போராடினர். பாண்டே 54 ரன்கள் எடுத்த நிலையில் ராஜ்புத் பந்தில் கிளீன் போல்டானார். ஷகிப் 28 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த யூசுப் பதான் 21 ரன்கள் எடுக்க, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஐதராபாத் அணியால் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 132 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

பஞ்சாப் வேகப்பந்து வீச்சாளா் அங்கித் ராஜ்புத், 4 ஓவர்களில் 14 ரன்களே விட்டு கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

பின்னர் 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் பஞ்சாப் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் லோகேஷ் ராகுலும் கிறிஸ் கெயிலும் நேர்த்தியான ஆட்டத்தை வெளிபடுத்தினர். விக்கெட் இழப்பின்றி 50 ரன்களை கடந்த போது, இந்த ஜோடியை ரஷித் கான் பிரித்தார். ராகுல் 32 ரன்கள் எடுத்த நிலையில் ரஷித் கான் பந்தில் போல்டானார். அடுத்து கெயிலும் 23 ரன்னில் அவுட் ஆக, அடுத்த வந்த யாரும் நிலையாக நிற்கவில்லை. விக்கெட்டுகள் தொடர்ந்து சரிந்தன. வெற்றி பெறும் என்ற நிலையில் இருந்த பஞ்சாப் அணி, பரிதாபகரமான நிலைக்கு தள்ளப்பட்டது. 19.2 ஓவரில் அந்த அணி 119 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ஐதராபாத் அணியில் அதிகபட்சமாக ரஷித் கான் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

எளிதாக வெற்றிபெற போட்டியில் தோல்வியைத் தழுவியது, பஞ்சாப் கேப்டன் அஸ்வினுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.