விளையாட்டு

ஷாருக் கானின் ஐபிஎல் வாக்குறுதியும்.. கசப்பான அனுபவமும்.. - மனம்திறந்த கங்குலி

ஷாருக் கானின் ஐபிஎல் வாக்குறுதியும்.. கசப்பான அனுபவமும்.. - மனம்திறந்த கங்குலி

webteam

ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா அணியை நிர்வகிப்பதற்கு சுதந்திரம் அளிப்பதாகக்கூறி, அப்படி எதையும் அளிக்கவில்லை என தற்போது கங்குலி மனம்திறந்துள்ளார்.

இந்திய அணியின் வரலாறு படைத்த கேப்டன்களில் முக்கியமானவர்களுள் ஒருவர் சவுரவ் கங்குலி. இவரது தலைமையில் 2003ஆம் ஆண்டு உலகக் கோப்பையின் இறுதிப்போட்டி வரை இந்திய அணி சென்றுள்ளது. இப்பேற்பட்ட கங்குலியின் தலைமையில் 2008 மற்றும் 2010 ஆகிய ஆண்டுகளின் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி படு தோல்வி அடைந்தது. ஒரு முறை 100 ரன்களுக்குள் அந்த அணி சுருண்டது.

இதனால் கங்குலியின் பெயருக்கு கலங்கம் ஏற்பட்டது. அவர் தலைமையில் கொல்கத்தா அணி 27 போட்டிகளில் 13 போட்டிகளை மட்டுமே வென்றது. இதையடுத்து 2011ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் ஏலத்தில் கங்குலி நிராகரிக்கப்பட்டு வெளியேறினார். அதன்பின்னர் கவுதம் காம்பீர் தலைமையில் கொல்கத்தா அணி 7 வருடம் விளையாடியது. இதில் 2 முறை கோப்பைகளையும் அந்த அணி வென்றது. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளின் அனுபவம் குறித்து சவுரவ் கங்குலி யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் மனம் திறந்துள்ளார். 

அவர் கூறும்போது, “ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா அணியை நிர்வகிக்க முழு சுதந்திரம் அளிப்பதாக ஷாருக் கான் உறுதியளித்தார்.ஆனால் அப்படி எதுவும் அளிக்கப்படவில்லை. அணியில் யாரை தேர்வு செய்வது என்பதில் பிறரின் தலையீடு இருந்தது. ஒரு அணி சிறப்பாக செயல்பட வேண்டும் என்றால் அந்த அணியின் கேப்டன் வசம் அணியை விட வேண்டும். உதாரணத்திற்கு சென்னை அணியை தோனி தான் நிர்வகிக்கிறார். இதேபோன்று மும்பையும் உள்ளது. அங்கு ரோகித் ஷர்மாவிடம் யாரை அணியில் சேர்க்க வேண்டும் என யாரும் கூறுவதில்லை” என்று தெரிவித்துள்ளார்.