இந்திய அணியுடனான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் சுழற்பந்து வீச்சாளராக 7 வயது சிறுவன் ஒருவர் இடம்பிடித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், மழை காரணமாக 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இதைத் தொடர்ந்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் பங்கேற்கின்றன. அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 31 ரன் வித்தியாசத்தில் சாதனை வெற்றி பெற்றது.பெர்த்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது. தொடர் 1-1 என்று சமநிலையை எட்டியுள்ளதால், மெல்போர்னில் வரும் 26 ஆம் தேதி தொடங்கும் 3 வது டெஸ்ட் போட்டி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுதினம் நடைபெறும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் பாக்சிங் டே டெஸ்ட் போட்டிகள் என அழைக்கப்படுகிறது. பாக்சிங் டே டெஸ்ட் போட்டிகள் சர்வதேச அளவில் முக்கியத்துவத்தையும் பெறுகின்றன. இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் ஒன்றுக்கு ஒன்று என சமநிலையில் உள்ள நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் ஆர்ச்சி ஷில்லர் என்ற 7 வயதே ஆன லெக் ஸ்பின்னர் 15 ஆவது வீரராக இடம் பிடித்துள்ளார். இதனை மெல்பர்னில் உள்ள YARRA பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அணிக் கேப்டன் டிம் பெய்ன் உறுதிசெய்தார்.
ஆர்ச்சி ஷில்லர் அணியில் சேர்க்கப்பட்டதில் நெகிழ்ச்சியான பின்னணி உள்ளது. பிறக்கும் போதே இதய பாதிப்பு இருந்த ஆர்ச்சி ஷில்லருக்கு 13 முறை அறுவை சிகிக்சைகள் நடந்துள்ளன. அவருக்கு எந்நேரமும் எதுவும் நடக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ள நிலையில், ஆர்ச்சி ஷில்லர் கிரிக்கெட்டின் மீது தீராத மோகத்துடன் இருந்து வருகிறார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆவதே லட்சியம் என தெரிவித்து வரும் ஆர்ச்சி ஷில்லருக்கு இணைக் கேப்டன் அந்தஸ்து கொடுக்கப்பட்டுள்ளது. மூன்றாவது டெஸ்ட்டில் களமிறங்க வாய்ப்பு கிட்டினால், விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்தப் போவதாக ஆர்ச்சி ஷில்லர் சூளுரைத்துள்ளார். கிரிக்கெட் கனவுகளுடன் இருக்கும் சிறுவன் ஆர்ச்சி, ஆஸ்திரேலியா அணி வீரர்களுடன் பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறார். அவரது கேப்டன் ஆசையை நிறைவேற்றும் வகையில் நாளை மறுநாள் நடைபெறவுள்ள போட்டிக்கான டாஸ் போடுவதுடன், தேசிய கீத நிகழ்விலும் ஆர்ச்சி ஆஸ்திரேலியாவின் இணை கேப்டனாக பங்கேற்கவுள்ளார்.