அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ், பிரசவத்திற்கு பிறகு மீண்டும் போட்டிக் களத்திற்கு திரும்புகிறார்.
அமெரிக்காவின் டென்னிஸ் புயல் செரினா வில்லியம்ஸ். ஆடுகளத்தில் எதிராளிகளுக்கு கடுமையான போட்டியாளர். போராட்டங்கள் இல்லாமல் இவரை வீழ்த்த முடியாது. அமெரிக்க ஓபன், ப்ரெஞ்ச் ஒபன், விம்பிள்டன், ஆஸ்திரேலியா ஓபன் என இவர் சூடாத மகுடங்களே இல்லை. கடந்த வருடம் கர்ப்பமான செரினா அதன் பின் போட்டிகளில் இருந்து தற்காலிகமாக விலகினார். செப்டரிம்பரில் செரினாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பெற்ற பிறகு தனது காதலனை நவம்பர் மாதம் கரம்பிடித்தார்.
செரினா தனக்கு குழந்தை பிறப்பதற்கு முன் அளித்த பேட்டியில், பிரசவம் முடிந்த பின்னர் மீண்டும் போட்டிகளில் கவனம் செலுத்துவேன் என்றும், அடுத்தாண்டு நடைபெறும் ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்பேன் என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அபுதாபியில் வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள போட்டியில், பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான ஜெலினா ஓஸ்டபென்கோவை எதிர்த்து செரினா விளையாடவுள்ளார். ஆஸ்திரேலிய ஓபனுக்கு ஆயத்தமாகும் வகையில், தற்போது மீண்டும் போட்டிக் களத்திற்கு செரினா திரும்புகிறார். ஒரு வருடத்திற்கு பிறகு மீண்டும் களமிறங்கவுள்ள செரினாவை காண அவரது ரசிகர்கள் ஆவலுடம் உள்ளனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய செரினா வில்லியம்ஸ், என் மகள் பிறந்த பிறகு முதன்முறையாக அபுதாபில் மீண்டும் களமிறங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன் என தெரிவித்துள்ளார்.