விளையாட்டு

6 பந்துகள் 6 சிக்ஸர்கள்... யுவராஜ் சிங் "ருத்ரதாண்டவம்" நிகழ்த்திய தினம் இன்று

JustinDurai
2007 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை டி20 போட்டியில் இந்திய அணியின் யுவராஜ் சிங் 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் பறக்க விட்டார். இதேநாள் யுவராஜ் சிங் அடித்த சிக்ஸர்களை நினைத்தால் இப்பொழுதும் நமக்கு சிலிர்க்கிறது. இந்த தரமான சம்பவம் நிகழ்ந்து 14 ஆண்டுகளாகிறது. ஆனாலும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 19 ஆம் தேதி, கிரிக்கெட்டின் தீவிர ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் இந்த நாளை யுவராஜ் சிங் பெயரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
2007 உலகக் கோப்பை பிளாஷ்பேக்
தென்னாப்ரிக்காவின் டர்பன் நகரில் நடந்த அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய 18 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்து இருந்தனர். அந்த நேரத்தில் யுவராஜ் சிங்கிற்கும், பிளண்டாப்பிற்கும் இடையே ஏதோ வாக்குவாதம் ஏற்பட்டது. பிளண்டாப் பேசிக் கொண்டே பீல்டிங் பக்கம் செல்ல, யுவராஜ் சிங் கோபமாக அவரை நோக்கி சென்றார். பின்னர் நடுவர் தலையிட்டு அவரை சமாதானப்படுத்தினார். 18வது ஓவரை பிளண்டாப்தான் வீசி இருந்தார். அந்த ஓவரின் 4,5வது பந்தில் பவுண்டரி அடித்திருந்தார் யுவராஜ். யுவராஜ் உடன் தோனி இருந்தார்.
பிளண்டாப் மூட்டிய கோபத்துடன் 19வது ஓவரை விளையாடினார் யுவராஜ் சிங். அந்த ஓவரை இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் பிராட் வீசினார். முதல் பந்திலேயே இமாலய சிக்ஸர் விளையாடினர். மைதானத்தை விட்டு பந்து வெளியே செல்ல கொஞ்சம் தூரம்தான். முதல் பந்தில் சிக்ஸர் அடித்ததுதான் தாமதம் அடுத்த 5 பந்துகளில் அடுத்தடுத்து சிக்ஸர்களை பறக்கவிட்டார். சிக்ஸர் விளாசிய கையோடு 12 பந்தில் அரைசதம் விளாசினார். இந்திய அணி அந்தப் போட்டியில் 4 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் எடுத்தது. யுவராஜ் 16 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி 200 ரன்கள் மட்டுமே எடுக்க இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டி20 வரலாற்றில் 6 பந்தில் 6 சிக்ஸர்கள் விளாசியது அதுவே முதன்முறை. யுவராஜ் சிங்கிற்கு 2007 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை ஒருநாள் தொடரில் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் தென்னாப்ரிக்காவின் ஹெர்ஷல் கிப்ஸ் 6 பந்தில் 6 சிக்ஸர் விளாசினார். ரவிசாஸ்திரி முதல் தர போட்டியில் இதேபோன்று அடித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேரி சோபர்ஸ் என்ற வீரர்தான் முதன்முதலாக 6 பந்தில் 6 சிக்ஸர் அடித்தவர். யுவராஜ் சிங் 6 பந்தில் 6 சிக்ஸர் விளாசி 14 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. ஆனாலும் கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத சம்பவம் அது.