விளையாட்டு

“பயிற்சி ஆட்டம் வேறு.. நிஜ ஆட்டம் வேறு” - இஷாந்த் கூறும் களம்

“பயிற்சி ஆட்டம் வேறு.. நிஜ ஆட்டம் வேறு” - இஷாந்த் கூறும் களம்

webteam

பயிற்சி ஆட்டத்தை நிஜ டெஸ்ட் போட்டியுடன் ஒப்பிட முடியாது என இந்திய அணியின் பந்துவீச்சாளர் இஷாந்த் ஷர்மா தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தப் பயணத்தில் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடந்து முடிந்துள்ளது. இந்தத் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்துள்ளது. தொடர் சமனில் முடிவதற்கு முக்கிய காரணம் மழைதான். இதைத்தொடர்ந்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. டிசம்பர் 6ஆம் தேதி தொடங்கும் இந்தத் தொடர் ஜனவரி 7ஆம் வரை நடைபெறும். டெஸ்ட் தொடருக்கு பிறகு 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறவுள்ளது. 

இந்நிலையில் டெஸ்ட் தொடரின் முன்னோட்டமாக ஆஸ்திரேலியா 11 அணியுடன், இந்திய அணி மோதும் 4 நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டி நாளை தொடங்குகிறது. சிட்னி மைதனாத்தில் நடைபெறும் இந்தப் போட்டிக்காக இரு அணி வீரர்கள் பயிற்சி மேற்கொண்டனர். பயிற்சியின் போது பேட்டியளித்து இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் ஷர்மா, “இந்திய அணியின் தற்போதைய நிலை என்னவென்று நன்றாக தெரியும். நீண்ட காலத்திற்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் விளையாடுகிறோம். நாங்கள் எதையும், யாரையும் எளிதாக எடுத்துக்கொள்ளமட்டோம். நாங்கள் மிகவும் ஊக்குவிக்கப்பட்டுள்ளோம். அதனால் கண்டிப்பாக இந்தத் தொடரை வென்றாக வேண்டும். 

எனவே யாரும் தனிப்பட்ட சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த நினைக்க முடியாது. அணியின் வெற்றிக்காகவே அனைவரும் போராட வேண்டும். ஆஸ்திரேலியாவில் அந்த அணியை எதிர்கொள்வது கடினமாக அனைவரும் கருதுகின்றனர். ஆனால் இந்தியா வலிமையாக இருப்பதாக நான் நினைக்கிறேன். நம்மிடம் திறமையான வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். பயிற்சி ஆட்டத்தை டெஸ்ட் தொடரோடு ஒப்பிட்டு பார்க்க முடியாது. ஏனென்றால் உண்மையான போட்டியின் ஆட்டக்களம் முற்றிலும் மாறுபடும்” என கூறியுள்ளார்.