ஒரு இந்திய ராணுவ வீரர் கொல்லப்பட்டால் அதற்குப் பதிலாக 100 ஜிகாதிகள் கொல்லப்பட வேண்டும் என கிரிக்கெட் வீரர் காம்பீர் கருத்துத் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் இடைத்தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த வீரர்களை பொதுமக்கள் சூழ்ந்துகொண்டு கும்பலாக கேலி செய்வது, வீரர்களை தாக்க முற்படுவது போன்ற காட்சிகள் அடங்கிய வீடியோ சமூகவலைதளங்களில் வெளியானது.
இந்த வீடியோ குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள கவுதம் காம்பீர், ஒவ்வொரு இந்திய ராணுவ வீரர் தாக்கப்படும்போதும், பதிலடியாக நூறு ஜிகாதிகள் கொல்லப்பட வேண்டும்; காஷ்மீர் இந்தியாவுக்குச் சொந்தமானது. ஆசாத் காஷ்மீர் வேண்டும் என்று நினைப்பவர்கள் நாட்டைவிட்டு உடனடியாக வெளியேறட்டும் என்று பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவைப் பதிவிட்டு கருத்து தெரிவித்துள்ள வீரேந்திர சேவாக், இந்த செயலை ஏற்றுக் கொள்ளமுடியாது. நமது எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த வீரர்களை இதுபோன்று நடத்தக்கூடாது என்று பதிவிட்டுள்ளார்.