டிவில்லியர்ஸ், விராட் கோலி
டிவில்லியர்ஸ், விராட் கோலி pt web
விளையாட்டு

”மிகப்பெரிய தவறு செய்துவிட்டேன்” - விராட் கோலி குறித்த தகவலை திரும்ப பெற்றார் டிவில்லியர்ஸ்!

Angeshwar G

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் இரு போட்டிகள் முடிவடைந்த நிலையில் இங்கிலாந்து அணி முதல் போட்டியிலும், இந்திய அணி இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெற்றிருந்தது.

முன்னதாக, தனிப்பட்ட காரணங்களுக்காக விராட் கோலி முதல் இரு டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகுவதாக பிசிசிஐ அறிவித்திருந்தது. அதேநேரத்தில், விராட்கோலிக்கு தனிப்பட்ட உரிமைக்கு மதிப்பளித்து, அதற்கான காரணங்களை யூகிக்க வேண்டாம் என ஊடகங்கள் மற்றும் ரசிகர்களை கேட்டுக்கொள்வதாகவும் பிசிசிஐ தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது. விராட் கோலிக்கு பதிலாக ரஜத் படிதார் அணியில் சேர்க்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் விராட் கோலியுடன் பெங்களூர் அணிக்காக விளையாடிய தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் டிவில்லியர்ஸ் யூ டியூப் நேரலையில் பேசும்போது, “எனக்கு நன்றாக தெரியும். அவர் நலமுடன் இருக்கிறார். அவர் குடும்பத்தினருடன் சிறிது நேரம் செலவிடுகிறார். அதனால் தான் முதலிரு டெஸ்ட் போட்டிகளில் அவர் விளையாடவில்லை. வேறு எதையும் நான் இப்போது உறுதிப்படுத்தப்போவதில்லை. அவர் நலமுடன் மகிழ்ச்சியாக இருக்கிறார்.

அவருக்கு இரண்டாவது குழந்தை பிறக்கப்போகிறது. குடும்ப நேரம் மற்றும் குடும்ப விஷயங்கள் இப்போது அவருக்கு முக்கியம். பெரும்பாலான மக்களுக்கு குடும்பம் தான் முக்கியமானது என நினைக்கின்றேன். அதைவைத்து விராட் கோலியை மதிப்பிட்டுவிட முடியாது” என தெரிவித்திருந்தார்.

இந்த செய்தி வைரலானது. பலரும் தங்களது சமூக ஊடகங்களில் விராட் கோலிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். ஆனால், விராட் கோலி - அனுஷ்கா தம்பதி தரப்பில் இருந்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

இந்நிலையில், டிவில்லியர்ஸ் தனது கருத்தினை திரும்பப் பெற்றுள்ளார். தவறான தகவலை பரப்பியதற்காக மன்னிப்பும் கோரியுள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள அவர், “நான் எனது யூடியூப் தளத்தில் மிகப்பெரிய தவறு செய்துவிட்டேன். நான் தவறான தகவலை பகிர்ந்து கொண்டேன். அந்த தகவல் தவறானது. உண்மையில்லை. அங்கு என்ன நடக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. என்னால் செய்ய முடிந்தது அவருக்கு நல்வாழ்த்துக்களை தெரிவிப்பது மட்டுமே.

விராட்டைப் பின்தொடரும் மற்றும் அவரது கிரிக்கெட்டை ரசிக்கும் முழு உலகமும் அவரை நன்றாக வாழ்த்த வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அவரது இடைவெளிக்கு காரணம் எதுவாக இருந்தாலும் அவர் இதிலிருந்து வலுவாகவும், சிறப்பாகவும், புத்துணர்ச்சியுடனும் திரும்பி வருவார் என நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.