விளையாட்டு

50 நிமிடங்களில் 50 யோகாசனங்கள்... குளோபல் வேர்ல்டு ரெக்கார்டு சாதனை படைத்த பள்ளி மாணவன்

kaleelrahman

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் 9 வயது மாணவன் பந்தை கையில் வைத்துக்கொண்டு ஐம்பது நிமிடங்களில் 50 யோகாசனங்களை செய்து உலக சாதனை நிகழ்த்தியுள்ளார்.


விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த சரவணக்குமார் - சவிதா தம்பதியினரின் மகன் நவீன்குமார். இவர், அரிமா மேல்நிலைப் பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கிறார். இச்சிறுவன் சிறுவயது முதலே யோகாசனம் செய்வதில் பல்வேறு வகையான சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.

இந்நிலையில் இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் அரிமா பள்ளி கலையரங்கத்தில் சுமார் 6அடி உயரம் 3அடி அகலம் உள்ள ஸ்டூலின் மீது எவ்வித பிடிமானமும் இன்றி கையில் வாலிபால் பந்தை வைத்துக்கொண்டு ஐம்பது நிமிடத்தில் 50 யோகாசனங்களை செய்து காட்டினார். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட குளோபல் உலகசாதனை கமிட்டியினர் நவீன்குமாரின் சாதனையை பாராட்டி குளோபல் வேர்ல்டு ரெக்கார்டு எனும் சாதனையாளர் பட்டத்தை வழங்கினர்.


இந்த வருடத்தில் இதுவே முதல் சாதனையாகும். மேலும் கையில் பந்தை வைத்துக் கொண்டு யாரும் இதுபோல் யோகாசனம் செய்து சாதனை படைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உலக சாதனையை வெற்றிகரமாக முடித்த நவீன் குமாருக்கு நகராட்சிகளின் நெல்லை மண்டல இயக்குனர் சுல்தானா பரிசு வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் மாணவனின் பெற்றோர், ஆசிரியர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.