பார்ட்னரின் தவறால் ரன் அவுட்டான கோலியின் அமைதி எனக்கு ஆச்சரியத்தை கொடுத்தது என சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறினார்.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 233 ரன்களை எடுத்துள்ளது. இந்தியாவின் இந்த தடுமாற்றத்திற்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது கோலியின் ரன் அவுட் தான். 74 ரன்கள் எடுத்து ஆட்டத்தில் செட்டாகி விளையாடிக் கொண்டிருந்த கோலி திடீரென ரன் அவுட்டாகியிருந்தார்.
இந்நிலையில் இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
“அந்த பந்தில் ரன் எடுத்திருக்கவே முடியாது. ஃபீல்டர் மிக அருகில் இருந்தார். இருப்பினும் பார்ட்னர் ரஹானேவின் அழைப்பை தட்டாமல் ரன் எடுக்க முன் வந்தார். கடைசியில் ரஹானே வேண்டாம் என்றதும் கோலி ரன் அவுட்டாகி விட்டார். தவறு பார்ட்னர் மீது இருந்தாலும் அவரிடம் கோபித்துக் கொள்ளாமல் சாந்தமாக பெவிலியன் திரும்பியது எனக்கு ஆச்சரியத்தை கொடுத்தது. இந்த இன்னிங்ஸில் பல தடைகளை கடந்த கோலிக்கு கொஞ்சம் வலி இருக்கும். அது இயல்பு” என்றார்.
லயன் வீசிய 77வது ஓவரின் கடைசி பந்தில் ஸ்ட்ரைக்கில் இருந்த ரஹானே சிங்கிள் எடுக்க முயன்று பிறகு பின் வாங்கியதால் நான் ஸ்ட்ரைக்கரில் இருந்த கோலி ரன் அவுட்டானார் என்பது குறிப்பிடத்தக்கது.