விளையாட்டு

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து சானியா மிர்சா திடீர் விலகல் - என்ன காரணம்?

JustinDurai

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து காயம் காரணமாக விலகுவதாக சானியா மிர்சா தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகள் வரும் ஆகஸ்ட் 29ம் தேதி முதல் செப்டம்பர் 11ம் தேதி வரை நடைபெறவுள்ளது. கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்ற உலகின் முன்னணி வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இதுவரை 6 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா, அமெரிக்க ஓபன் டென்னிஸில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்தநிலையில், அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து காயம் காரணமாக விலகுவதாக சானியா மிர்சா திடீரென்று அறிவித்துள்ளார்.

இதுகுறித்து சானியா மிர்சா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இரண்டு வாரத்திற்கு முன்பு கனடாவில் நடைபெற்ற  டென்னிஸ் போட்டியில் விளையாடியபோது, முழங்கை பகுதியில் காயம் ஏற்பட்டது. ஸ்கேன் ரிப்போர்ட் வரும் வரை இதனை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் தற்போது தசைநாரில் ஏற்பட்ட காயம் காரணமாக, சில வாரங்கள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் என்னை அறிவுறுத்தியுள்ளனர். இதனால் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் என்னால் விளையாட முடியாது. ஓய்வு குறித்து அறிப்பதற்கு இது சிறந்த நேரமல்ல. ஓய்வு குறித்த அறிவிப்பை நிச்சயம் நான் உங்களிடம் தெரியப்படுத்துவேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

சானியா மிர்ஸா கடந்த ஜனவரியில் டென்னிஸில் இருந்து ஓய்வுபெறப் போவதாக அறிவித்தார். இந்த ஆண்டின் இறுதி வரை தொடர்ந்து விளையாடுவேன் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இதையும் படிக்க: யுஸ்வேந்திர சாஹல் உடன் விவாகரத்தா? - மவுனம் கலைத்த தனஸ்ரீ