விளையாட்டு

இலங்கை முன்னாள் வீரர் ஜெயசூர்யாவுக்கு 2 ஆண்டுகள் தடை

webteam

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஜெயசூர்யா சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் இரண்டு ஆண்டுகள் தடை செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை அணியின் நட்சத்திர ஆட்டக்காரர்களில் ஒருவர் சனத் ஜெயசூரியா. இவர் இலங்கையின் மிக முக்கியமான பேட்ஸ்மேனாக இருந்தார். இவர் இலங்கை அணிக்காக 445 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். அத்துடன் இலங்கை அணிக்காக 110 டெஸ்ட் போட்டிகளிலும் 31 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். ஒருநாள் போட்டியில் முதல் முறையாக 12 ஆயிரம் ரன்கள் மற்றும் 300 மேற்பட்ட விக்கெட்களை சாய்த்த முதல் வீரர் ஆவார். மேலும் 1996 ஆம் ஆண்டு இலங்கை அணி உலகக் கோப்பை வென்றபோது ஜெயசூர்யா தான் தொடர் நாயகன் விருதை வென்றார். இவர் கடந்த 2011ஆம் ஆண்டு சர்வேதச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுப் பெற்றார். 

அதன்பிறகு ஜெயசூர்யா இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார். கடந்த 2013 ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக பொறுப்பு வகித்து வந்தார். 

இந்நிலையில் இலங்கை கிரிக்கெட்டில் நடைபெற்ற ஊழல் குறித்த விசாரனையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஊழல் தடுப்பு அமைப்பு நடத்துவந்தது. இந்த அமைப்பின் விசாரணைக்கு ஜெயசூர்யா ஒத்துழைக்கவில்லை என்ற புகார் எழுந்தது. இதனையடுத்து இந்தப் புகாரை விசாரித்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று அதன் தீர்ப்பை வெளியிட்டுள்ளது. 

அதன்படி ஜெயசூரியா இரண்டு ஆண்டுகள் தடைசெய்யப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஊழல் தடுப்பு அமைப்பின் மேலாளர் அலெக்ஸ் மார்ஷல், “இந்த நடவடிக்கை கிரிக்கெட் கவுன்சிலின் விதிமுறைகளை பின்பற்றியே எடுக்கப்பட்டன. விதிமுறைகளை பின்பற்றி நடப்பதே கிரிக்கெட் வீரர்களுக்கு முக்கியமான ஒன்று” எனக் கூறியுள்ளார்.