விளையாட்டு

”கோலி சதமடிக்கும் போது மட்டும் குறை கூறுகிறார்கள்...”- சாடிய பாக். வீரர் சல்மான் பட்!

Rishan Vengai

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும் ஓபனிங் பேட்டருமான சல்மான் பட், விராட் கோலி சதமடித்தாலும், அவருக்குத் தகுதியான பெருமையை பலர் வழங்குவதில்லை என்று அவர்களை சாடி பேசினார்.

இந்திய அணியின் தற்போதைய சாம்பியன் பேட்டரான விராட் கோலி, இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில், தன்னுடைய 73ஆவது சதத்தை அடித்து அசத்தியிருந்தார். மேலும் ஒருநாள் போட்டிகளில் 45 சதங்களை பதிவு செய்த அவர், சொந்த மண்ணில் 20 சதங்களை பதிவு செய்து சச்சினோடு சமன் செய்திருந்தாலும், குறைவான போட்டிகளில் 20 சதங்களை அடித்து சச்சின் டெண்டுல்கரை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்திருந்தார் விராட் கோலி.

இந்நிலையில் அவருடைய சதத்திற்கு பிறகு பலர், `இலங்கையின் பந்துவீச்சு சுமாராக இருந்தது, அது பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளம் 'என்று கோலியின் சதத்திற்கு எதிரான கருத்துகளை பதிவு செய்திருந்தனர். விராட் கோலி குறித்து கருத்து தெரிவித்திருந்த இந்திய முன்னாள் கவுதம் கம்பீர், “சச்சினோடு எப்படி விராட்கோலியை ஒப்பிடுவீர்கள்? அவருடைய காலத்தில் 30 யார்டுக்குள் 5 வீரர்கள் இருக்கவேண்டும் என்ற விதி இல்லை. மேலும் இலங்கையின் பந்துவீச்சு மோசமானதாக இருந்தது. விராட் கோலியை விட ரோகித் மற்றும் கில் ஆட்டம் எனக்கு ஆச்சரியத்தை கொடுத்தது” என்று தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய சல்மான் பட், ”சில பேர் கோலி சதமடித்தாலும் அது பிளாட் பிச் என்றும், எதிரணியினர் பலவீனமாக பந்துவீசினர் என்றும் குறை கூறுகின்றனர். விராட் கோலி ஆசிய கோப்பையின் போது ஆப்கானிஸ்தான் போன்ற ஒரு அணிக்கு எதிராக தனது சதத்தை இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கொண்டுவந்தார். அப்போது அவர்கள் மிகவும் சக்திவாய்ந்த பந்துவீச்சு தாக்குதலைக் கொண்டிருந்தனர். எத்தனை பேட்டர்கள் அவர்களுக்கு எதிராக சதம் அடித்திருக்கிறார்கள்? பிளாட் பிச்களில் அவர் சதமடித்திருந்தால், ஒருசிலமுறை தானே அடித்திருக்க முடியும்! நினைவில் கொள்ளுங்கள் அவர் 73 முறை சதங்களை விளாசியுள்ளார்” என்று சாடினார்.

மேலும், “சிலர் ஏன் இதைச் செய்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. என்னை பொறுத்தவரை விராட் ஒரு கிரிக்கெட் மேதை" என்று பெருமையாக பேசினார். மற்றும் டி20 உலகக் கோப்பையின் போது பாகிஸ்தானுக்கு எதிரான விராட் கோலியின் ஆட்டம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருந்தது என்று கூறிய அவர், ” பார்ம் அவுட்டில் இருக்கும் ஒரு வீரர் அதுபோன்ற பாணியில் விளையாடுவது என்பதெல்லாம் ஒருபோதும் எளிதான காரியமல்ல” என்று புகழ்ந்தார். மேலும் விராட் கோலியின் அந்த உலகக்கோப்பை ஆட்டம் தான் எனக்கு விராட் கோலியின் சிறப்பான ஆட்டமாக தெரிகிறது என்று தெரிவித்தார்.