’தன்னை சூதாட்டத் தரகர் தொடர்பு கொண்டு மேட்ச் பிக்சிங் தொடர்பாக பேசினார்’ என்று பாகிஸ்தான் கிரிக்கெட் கேப்டன் சர்ப்ஃராஸ் அகமது கூறிய திடீர் புகாரை அடுத்து விசாரணை தொடங்கியுள்ளது.
பாகிஸ்தான் - இலங்கை அணிகள் இடையேயான கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்து வருகிறது. மூன்றாவது ஒரு நாள் போட்டி கடந்த 17-ம் தேதி அபுதாபியில் நடந்தது. போட்டிக்கு முன், சூதாட்ட தரகர் ஒருவர் தன்னைத் தொடர்பு கொண்டு மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட கேட்டதாகவும் அதை தான் மறுத்ததாகவும் பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ஃராஸ் நேற்று கூறினார். இதுபற்றி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரிகளிடம் அவர் தெரிவித்தார். இது பரபரப்பானது.
இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய சேர்மன் நஜம் சேதி கூறும்போது, ‘பாகிஸ்தான் கேப்டனை சூதாட்ட தரகர் சந்தித்தது உண்மை என தெரியவந்துள்ளது. இது பற்றி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு தெரிவித்துள்ளோம். விசாரணையையும் முடுக்கியுள்ளோம்’ என்றார்.