விளையாட்டு

உலகக்கோப்பையை கைப்பற்றியது சிறந்த தருணம்.. லாரியஸ் விருதை வென்றார் சச்சின்

உலகக்கோப்பையை கைப்பற்றியது சிறந்த தருணம்.. லாரியஸ் விருதை வென்றார் சச்சின்

webteam

விளையாட்டு உலகின் உயரிய அங்கீகாரங்களில் ஒன்றான லாரியஸ் விருதை கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பெற்றுள்ளார்.

விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டுதோறும் லாரியஸ் விருதுகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, 2019-ஆம் ஆண்டில் சிறந்து விளங்கியவர்களுக்கான விருது வழங்கும் விழா, ஜெர்மனி தலைநகர் பெர்லினில் கோலாகலமாக நடைபெற்றது. இதில், சிறந்த வீரருக்கான விருது, ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தில் ஆறு முறை சாம்பியனான லீவிஸ் ஹேமில்டனுக்கும், நட்சத்திர கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸிக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டது. இதன்மூலம், லாரியஸ் விருதை வென்ற முதல் கால்பந்து வீரர் என்ற சாதனைக்கு மெஸ்ஸி சொந்தக்காரர் ஆனார்.

சிறந்த விளையாட்டு வீராங்கனைக்கான விருதை, அமெரிக்க ஜிம்னாஸ்டிக்ஸ் ஜாம்பவானும், உலக சாம்பியன்ஷிப் தொடரில் அதிக பதக்கங்களை வென்றவருமான சிமோன் பைல்ஸ் தட்டிச் சென்றார்.

கடந்தாண்டு நடைபெற்ற ஆடவருக்கான ரக்பி உலகக்கோப்பையை வென்ற தென்னாப்பிரிக்கா, சிறந்த அணிக்கான விருதை வசப்படுத்தியது. லாரியஸ் வாழ்நாள் சாதனையாளர் விருதை, ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த கூடைப்பந்து ஜாம்பவான் டிர்க் நோவிட்ஸ்கி தமதாக்கினார். கடந்த 20 ஆண்டு காலத்தில், 2011 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகக்கோப்பையை சச்சின் டெண்டுல்கர் கைப்பற்றியது, சிறந்த விளையாட்டு தருணமாக அங்கீகரிக்கப்பட்டு அவருக்கு விருது அளிக்கப்பட்டது.