விளையாட்டு

தோனியின் ஓய்வு முடிவில் யாரும் தலையிடக் கூடாது சச்சின் டெண்டுல்கர் கருத்து

தோனியின் ஓய்வு முடிவில் யாரும் தலையிடக் கூடாது சச்சின் டெண்டுல்கர் கருத்து

webteam

தோனியின் ஓய்வு குறித்து அவர் தான் முடிவு எடுக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் நேற்று முன் தினம் மோதின. மழை குறுக்கிட்டதால் இந்தப் போட்டி நேற்று தொடர்ந்து நடைபெற்றது. முதலில் ஆடிய நியூசிலாந்து அணி, 239 ரன்களை சேர்த்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி, 49.3 ஓவர்களில் 221 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து தோல்வியை தழுவியது. இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜாவும் (77) தோனியும் (50) கடைசி வரை போராடினர்.

இந்நிலையில் நேற்றைய போட்டியில் தோனி ரன் அவுட் ஆனவுடன் சமூக வலைத்தளங்களில் '#ThankYouMSD' , '#ThankYouDhoni' என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டானது. இதில் ரசிகர்கள் தோனியை பாராட்டி வந்தனர். அத்துடன் சிலர் அவரின் ஓய்வு குறித்தும் பதிவிட்டு வந்தனர். இதனையடுத்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தோனியின் ஓய்வு குறித்து கருத்து தெரிவித்துள்ளார். 

அதில், “தோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவது அவரது தனிப்பட்ட விருப்பம். அதில் நாம் யாரும் தலையிடக் கூடாது. அவரின் முடிவு என்னவாக இருந்தாலும் அதை நாம் மதித்து ஏற்றுக்கொள்ள வேண்டும். மேலும் அவர் முடிவு எடுக்கும் வரை நாம் காத்திருக்கவேண்டும். அத்துடன் இந்திய அணியின் தோனியின் பங்களப்பு மிகவும் சிறப்பானது. அவரின் சிறப்பான ஆட்டத்திற்கு தான் அவருக்கு இவ்வளவு ஆதரவு கிடைத்துள்ளது. 

கிரிக்கெட் வரலாற்றில் எத்தனை பேருக்கு இவ்வளவு சிறப்பான கிரிக்கெட் பயணம் அமையும்? அத்தகைய சிறப்பை தோனி பெற்றுள்ளார். அத்துடன் நேற்றைய போட்டியில் தோனி களத்தில் இருந்தவரை இந்திய அணி வெற்றிப் பெற வாய்ப்பு இருந்தது. எனவே அவரின் ஓய்வு முடிவை அவர் அறிவிக்கும் வரை நாம் இது பற்றி எதுவும் பேசக்கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.