WTC Final
WTC Final Twitter
விளையாட்டு

”No.1 வீரரான அஸ்வினை அணியில் ஏன் சேர்க்கவில்லை என்பது எனக்கு புரியவேயில்லை” - ஆதங்கப்பட்ட சச்சின்!!

Justindurai S

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியிடம் படுதோல்வியை சந்தித்திருக்கிறது. இதன் மூலம் ஆஸ்திரேலியா உலக டெஸ்ட் சாம்பியன் ஆனது. இந்தியா 2-வது முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்துள்ளது. இந்த தோல்விக்கு அணித் தேர்வும், பேட்ஸ்மேன்களின் சொதப்பலான பேட்டிங்கும், முதல் நாளில் இந்திய பவுலர்களின் மோசமான பந்துவீச்சுமே காரணங்களாக அமைந்துள்ளன.

WTC Final

குறிப்பாக ஆஸ்திரேலிய அணியின் ஆஃப் ஸ்பின்னர் நாதன் லயன் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில் இந்திய அணி தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் சேர்க்கப்படவே இல்லை. டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் முதல் இடத்திலும், டெஸ்ட் ஆல்-ரவுண்டர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்திலும் இருக்கும் அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது அனைவருக்கும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

தொடக்கத்தில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்த மைதானம் பின்னர் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமானதாக மாறத் தொடங்கியது. இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளராக ஜடேஜா மட்டுமே இடம்பெற்றிருந்தார். இந்த டெஸ்டில் நாதன் லயன் 5 விக்கெட்டுகளையும் ஜடேஜா 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது அஸ்வின் இருந்திருந்தால் நிச்சயமாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பார். அப்படியிருக்கையில் கேப்டன் ரோகித் சர்மா ஆடுகளத்தை தவறாக கணித்து அணியில் பிளேயிங் லெவனில் அஸ்வினை சேர்க்காமல் விட்டார். இது அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது.

WTC Final

ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸில் ட்ராவிஸ் ஹெட் - ஸ்மித் ஜோடி 250 ரன்களை பார்ட்னர்ஷிப்பில் குவித்தது. இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இந்திய அணி தடுமாறியது. ஆஸ்திரேலியா அணியில் இடது கை பேட்ஸ்மேன்கள் பலர் இருக்கும் நிலையில் அஸ்வினை இந்திய அணியில் சேர்த்து இருந்தால் ரன் வேட்டையை அவர் நிச்சயம் கட்டுப்படுத்தி இருப்பார்.

முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி சொன்னது போல், அஸ்வின் போன்ற ஒரு மேட்ச் வின்னரை அணியில் எடுக்காமல் இந்தியா மிகப்பெரிய தவறு செய்துவிட்டது.

இந்த நிலையில் இந்திய அணியின் தோல்வி குறித்து கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் காட்டமாக விமர்சித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில், ''இந்திய அணிக்கு சில நல்ல தருணங்கள் இருந்தன. அதை அவர்கள் சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை. ஆனால் ஒரு விஷயத்தை மட்டும் என்னால் இன்னும் புரிந்துகொள்ள முடியவில்லை. உலகின் நம்பர் 1 டெஸ்ட் பவுலர் ஏன் ஆடும் அணியில் அவர் ஏன் எடுக்கப்படவில்லை?

Ashwin & Sachin Tendulkar

திறமையான சுழற்பந்து வீச்சாளர்கள் எப்போதும் டர்னிங் டிராக்குகளை நம்பியிருக்க மாட்டார்கள். அவர்கள் காற்றில் பந்தை திருப்பியும், மைதானத்தின் மேற்பரப்பிலிருந்து பவுன்சரை எடுத்துவந்தும் வேரியேஷனை காமிப்பார்கள். ஆஸ்திரேலிய அணியின் டாப் 8 பேட்டர்களில் 5 பேர் இடதுகை வீரர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது'' என்று குட்டு வைத்திருக்கிறார்.

இந்த தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேசுகையில், ''இந்த முடிவை ஏற்றுக்கொள்வது கடினம்தான். டாஸில் வென்று பவுலிங்கை தேர்வு செய்தது சரியான முடிவே. அதற்கேற்ப, முதல் இன்னிங்ஸின் முதல் செஷனில் நமது பவுலர்கள் நன்றாகவே பந்துவீசினர். ட்ராவிஸ் ஹெட் - ஸ்மித் இணைந்து ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிட்டனர்.

WTC Final

இந்தியா சார்பிலும், முதல் இன்னிங்ஸில் நல்ல போராட்டம் வெளிப்பட்டது. ரஹானே - ஷர்துலின் பார்டனர்ஷிப்பால் மதிப்பான ரன்களை சேர்க்க முடிந்தது. சொல்லப்போனால் அதனாலேயே கடைசிநாள் வரை ஆட்டத்தில் எங்களால் உயிர்ப்போடு செயல்பட முடிந்தது.

பந்துவீச்சை பொறுத்தவரை, நிறைய பேசி, நிறைய திட்டங்கள் வைத்திருந்தாலும், அவற்றை சரியாக செயல்படுத்தவில்லை. சரியான லைன் மற்றும் லெந்தில் பந்துவீசத் தவறிவிட்டோம். இரண்டாவது இன்னிங்ஸில் பந்துவீச்சை விட பேட்டிங்கில் சொதப்பி விட்டோம் என்றே சொல்ல வேண்டும். மைதானம் பேட்டிங்கிக்கு ஒத்துழைக்கக்கூடியதாக இருந்தும் அதை எங்களின் பேட்ஸ்மேன்கள் சரியாக பயன்படுத்தவில்லை.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்காக கடந்த 4 ஆண்டுகளாக கடினமாகவே உழைத்திருக்கிறோம். நிறைய போராடியிருக்கிறோம். அதனால்தான் இரண்டு முறை இதன் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றோம். இப்போது தோல்விதான். அதேநேரம், தோல்வி அடைந்துவிட்டோம் என்பதற்காக கடந்த இரண்டு ஆண்டுகளில் நாங்கள் சாதித்தவற்றை மறந்துவிட முடியாது. அடுத்த சாம்பியன்ஷிப்புக்காக போராட போகிறோம்" என்று தெரிவித்தார்.