விளையாட்டு

'யார எப்படி வழிநடத்தனும்னு தெரிந்திருந்தார் கங்குலி' - சச்சின் டெண்டுல்கர் புகழாரம்

JustinDurai

இந்திய கிரிக்கெட் அணியில் மிகச்சிறந்த கேப்டனாக வலம் வந்தவர் கங்குலி எனப் புகழ்ந்துள்ளார் சச்சின் தெண்டுல்கர்.

பிசிசிஐ தலைவரும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி நாளை தனது 50-வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். இதையொட்டி இப்போதிருந்தே பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறிவருகின்றனர். இந்நிலையில் பேட்டி ஒன்றில் கங்குலியை குறித்துப் பேசியுள்ள முன்னாள் வீரர் சச்சின் தெண்டுல்கர், ''இந்திய கிரிக்கெட் அணியில் மிகச்சிறந்த கேப்டனாக வலம் வந்தவர் கங்குலி. வீரர்களுக்கு சுதந்திரம் கொடுப்பதற்கும், அவர்களுக்கு சில பொறுப்புகளை வழங்குவதற்கும் இடையே சமநிலையை எவ்வாறு பராமரிப்பது என்பது அவருக்குத் தெரியும். கங்குலி கேப்டனாக பொறுப்பேற்ற போது, இந்திய கிரிக்கெட் ஒரு மாறுதல் கட்டத்தில் இருந்தது. எங்களுக்கு அடுத்த கட்ட வீரர்கள் தேவைப்பட்டனர். இந்திய அணியை முன்னோக்கி நகர்த்துவதற்கான ஒரு தளம் உருவாக வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

அந்த நேரத்தில் நாங்கள் சிறந்த தரமான வீரர்களைக் கண்டோம். வீரேந்திர சேவாக், யுவராஜ் சிங், ஜாகீர் கான், ஹர்பஜன் சிங், ஆஷிஷ் நெஹ்ரா போன்ற ஒரு சிலரை குறிப்பிடலாம். அவர்கள் திறமையான வீரர்கள் என்றாலும், கெரியரின் தொடக்கத்தில் இருந்ததால் அவர்களுக்கு ஒரு ஆதரவு தேவைப்பட்டது. அந்த ஆதரவை கங்குலி வழங்கினார். அவர்கள் தங்களை வெளிப்படுத்த தேவையான சுதந்திரத்தையும் பெற்றனர்" என்று தெண்டுல்கர் கூறினார்.

இந்திய அணியின் கேப்டன்கள் வரிசையில் வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்தவர் சவுரவ் கங்குலி. 1990களில் அணியில் அறிமுகமான கங்குலி, தனது திறமையாலும், தலைமைப் பண்பாலும் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஒட்டுமொத்தமாக 311 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள கங்குலி 11,363 ரன்கள் குவித்துள்ளார். 2003ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி வரை இந்திய அணியை அழைத்துச் சென்றார்.

அதேபோல் ஒரு நாள் கிரிக்கெட்டில் சச்சின் - கங்குலி இணைக்கு ஈடு இணை ஏதும் இதுவரை இல்லை. இந்திய அணியின் சிறந்த ஜோடியான சச்சின்-கங்குலி, ஒருநாள் அரங்கில் 176 முறை இணைந்து, 8,227 ரன்கள் (சராசரி 47.55) எடுத்துள்ளனர். வேறு எந்த ஜோடியும் 6,000 ரன்களை தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாம்: என்னது... பதற்றமா? அதுவும் எனக்கா?’- தோனியின் கூல் கேப்டன்ஷிப் மொமன்ட்ஸ்! #HBDDhoni