விளையாட்டு

‘டவுன் டு எர்த் .. பாட்டம் ஆஃப் த ஹார்ட்..’ - சர்ச்சின் அரவணைத்த மாற்றுத்திறனாளி

webteam

சச்சின்! கிரிக்கெட் உலகின் ‘தரமான சம்பவம்’. இன்னும் அழுத்தி சொன்னால் பல லட்சம் பேர்களில் ஆதர்சம். அந்தளவுக்கு மனிதர் தனது ஆட்டத்தால் அசர அடித்தவர். எதிர் அணியினரை தனது திறமையால் கலங்கடித்தவர். இந்தியாவை பொறுத்தவரை இவர் ஒரு கவுரவம். எட்ட முடியாத அளவுக்கு பல சாதனைகளை சச்சின் படைத்திருந்தாலும் நெருங்கக் கூடிய அளவுக்கு மிக எளிமையானவர். ‘டவுன் டு எர்த்’ என ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை உண்டு. அதை மீறி எளிமையாவர். சுருக்கமாக அதே ஆங்கிலத்தில் சொன்னால் bottom of the heart.

இந்த வார்த்தைக்கு சரியான சம்வங்கள் அவரது வாழ்க்கையில் நடந்துள்ளன. கடந்த ஆண்டு மும்பை ரோட்டோரமாக சில இளைஞர்கள் கிரிக்கெட் ஆடிக் கொண்டிருந்தனர். அது முறையான ஆட்டம் அல்ல. இந்தியில் இதற்கு ஒரு அழகான சொல் உண்டு. அதாவது ‘கல்லி கிரிக்கெட்’. பந்து சரியாக இருக்காது. மட்டை சரியாக இருக்காது. ஏன் ஸ்டெம்பு கூட இருக்காது. அப்படி ஒரு தெருவோர ஆட்டம். அப்படிதான் அந்த இளைஞர்கள் ட்ராபிஃக் போலீஸ் பயன்படுத்துவதற்காக வைத்துள்ள plastic road barricade டை தங்களின் ஆட்டத்திற்கு ஸ்டெம்பாக வைத்து ஆடிக்கொண்டிருந்தார்கள்.

அது அழகான இரவு பொழுது. அவர்கள் ஆடிக்கொண்டிருந்த சாலையில் மெட்ரோ பணிகள் நடந்து கொண்டிருந்ததால் மக்கள் நெரிசல் அதிகம் இல்லாமல் இருந்தது. அதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அந்த இளைஞர்கள் தங்களது ஆட்டத்தில் அதிரடிக் காட்டிக் கொண்டிருந்தார்கள். அப்போது அந்த வழியே வந்த மிரட்டலான காரில் இருந்து இறங்கிய ஒருவர், ‘பசங்களா உங்களோட விளையாட ஒரு வீரர் வருகிறார். அவர் இரண்டு பந்துகளை விளையாட நீங்கள் அனுமதிக்க வேண்டும். அவர் எங்க சாதா வீரர்’ என்றபடி கார் கதவை திறந்துவிட்டார். அதன் உள்ளே இருந்து வீதிக்கு இறங்கி வந்தவர் சாதாரண வீரர் இல்லை. சாதனை நாயகன் சாட்சாத் சச்சின். அந்தப் பசங்களால் நம்ப முடியவில்லை. தெரு ஓரமாக ஆடிய அந்த இளைஞர்களின் மட்டையை வாங்கி மன மகிழ ஆடினார் சச்சின்.

மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள குர்லா குடியிருப்புக்கு அருகே நடந்த இந்த ஆட்டத்தை பார்த்து பலரும் கூடிவிட்டனர். அவர்களுடன் செல்ஃபி எடுத்தபடி விடைபெற்ற சச்சின் இந்த வீடியோவை ட்விட்டர் தன் பக்கத்திலும் தட்டி விட்டிருந்தார். அப்புறம் என்ன சச்சினை கொண்டாட இது ஒன்று போதாதா? பலரும் அந்த வீடியோவை வைரலாக்கி வாழ்த்தினர். இப்படி சச்சின் தன் எளிமையை உணர்த்த பல விஷயங்களை தன் ட்விட்டரில் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்.

அப்படி அவர் பகிர்ந்துள்ள ஒரு வீடியோ பலரது இதயத்தை நெகிழ வைத்துள்ளது. கிரிக்கெட் மீது இளைஞர்களுக்கு எந்த அளவுக்கு தீராத மோகம் இருக்கிறது என்பதை எடுத்து காட்டும் அந்த வீடியோவை பலரும் நெஞ்சம் நெகிழ பார்த்து பகிர்ந்து வருகிறார். ஏறக்குறைய முதலில் நாம் சொன்ன வீடியோ ‘கல்லி கிரிக்கெட்’ ரகம். இதுவும் அதே ரகம்தாம். என்ன வித்தியாசம் இந்த வீடியோவிலுள்ள பசங்க மைதானத்தில் ஆடுகிறார்கள். அந்த ஆட்டத்தில் கலந்து கொண்டிருக்கும் ஒரு பையன் மட்டும் மாற்று திறனாளி. அதாவது நம்மை போல நார்மலாக நடக்க முடியாதவர். அவரது இடுப்புக்கு கீழ் உள்ள இரண்டு கால்களும் செயலற்று உள்ளது. ஆனாலும் அந்தப் பையன் கொஞ்சமும் சளைக்காமல் வெறித்தனமாக அந்த ஆட்டத்தை ஆடுகிறார். தலைத் தெறிக்க ஓடி ரன் எடுக்க முயற்சிக்கிறார். எவ்வளவு பெரிய இரும்பு இதயத்தைக் கூட நொறுக்கும் அந்தக் காட்சி மிக உற்சாகத்தை ஏற்படுத்துகிறது.

சச்சின் வெளியிட்டுள்ள அந்தப் பதிவில், “ 2020 ஆண்டை இந்த உத்வேகம் தரும் மடா ராம் அவரது நண்பர்களுடன் ஆடும் கிரிக்கெட் வீடியோவுடன் தொடங்குங்கள். இது என் இதயத்தை நெகிழச் செய்தது. இந்த வீடியோ உங்கள் இதயத்தையும் நான் நிச்சயமாக நெகிழச் செய்யும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

சச்சினின் இந்தப் பதிவில் உள்ள வார்த்தைகளை போலவே அந்த வீடியோவில் உள்ள பையன் தனது ஆட்டத்தால் நெகிழவே செய்கிறார். ஆயிரம் வசதிகள் இருந்தும் முடங்கிக் கிடக்கும் பலரை தன் தைரியமான ஆட்டத்தால் மூச்சடைக்க வைக்கிறார். ஆகவேதான் அந்த வீடியோ பேசு பொருளாக மாறியிருக்கிறது.