விளையாட்டு

மறக்க முடியுமா? கிரிக்கெட் கடவுள் சச்சின் ஓய்வுப்பெற்ற நாள் இன்று..

மறக்க முடியுமா? கிரிக்கெட் கடவுள் சச்சின் ஓய்வுப்பெற்ற நாள் இன்று..

JustinDurai

இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாத தினம் இன்று. 2013 நவம்பர் 16. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியோடு தனது கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக் கொண்டார் சச்சின் தெண்டுல்கர்.

1989-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி 2013 வரை, 24 ஆண்டுகள் இந்திய அணிக்காக ஆடியவர். சர்வதேச கிரிக்கெட்டில் நீண்டகாலம் ஆடியவர் சச்சின் தான். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று ஏழாண்டுகள் ஓடிவிட்டாலும், அவருடைய அலை மட்டும் இன்னும் ஓய்ந்தபாடில்லை.

2013 அன்று இதே நாளில்தான் மும்பையில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தி மூன்றே நாட்களில் போட்டியை முடிவுக்கு கொண்டு வந்தது இந்திய அணி. அதோடு சச்சினின் வியப்பான சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவடைந்தது.

சச்சினின் கடைசி டெஸ்ட் போட்டியைக் காண அவருடைய தாய், குடும்பத்தினர் மற்றும் பயிற்சியாளர் ராம்காந்த் அச்ரேக்கர் ஆகியோர் மைதானத்துக்கு வந்திருந்தார்கள். அந்தப் போட்டியில் டாஸ் போடுவதற்கு விசேஷ நாணயம் பயன்படுத்தப்பட்டது. அந்த நாணயத்தின் ஒரு பக்கத்தில் மஹாராஷ்டிர கிரிக்கெட் சங்கத்தின் இலச்சினையும், மறுபக்கத்தில் சச்சினின் உருவப்படமும் பொறிக்கப்பட்டிருந்தன. டாஸ் போட்டபிறகு அந்த நாணயம் சச்சினிடமே வழங்கப்பட்டது.

உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகியிருந்த அந்த டெஸ்ட் போட்டி மூன்றே நாள்களில் முடிந்துபோனதால் போட்டியின் 4 மற்றும் 5-வது நாட்களில் சச்சினுக்காக திட்டமிடப்பட்டிருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் அடியோடு ரத்தாகின.

இந்த டெஸ்டில் 74 ரன்கள் எடுத்த சச்சினின் விக்கெட்டை கடைசியாக எடுத்தவர், ஆஃப் ஸ்பின்னர் நர்சிங் டியோநரேன். சச்சின் தனது கடைசி டெஸ்ட் (2013), கடைசி ஒருநாள் போட்டி (2012), ஒரேயொரு சர்வதேச டி20 (2006), கடைசி ஐபிஎல் (2013), கடைசி சாம்பியன்ஸ் லீக் (2013), கடைசி ரஞ்சிப் போட்டி (2013) என அனைத்திலும் வெற்றியோடே விடை பெற்றிருக்கிறார்.