இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்தார். திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வந்த சச்சின் செய்தியாளர்களிடம் பேசும்போது, இந்திய மகளிர் கிரிக்கெட் அணி உலகக்கோப்பை சாம்பியன் பட்டம் வெல்ல தனிப்பட்ட முறையில் வாழ்த்துவதாகக் கூறினார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய முன்னாள் கிரிக்கெட் வீரரும் ராஜ்யசபா எம்.பி.யுமான சச்சின் டெண்டுல்கர் இன்று திருப்பதி வந்தார். அவருக்கு ரேணிகுண்டா விமான நிலையத்தில் ரசிகர்கள் திரண்டு வரவேற்பு அளித்தனர். பின்னர் கார் மூலம் திருமலைக்கு வந்த சச்சின் டெண்டுல்கர் செய்தியாளர்களை சந்தித்தார்.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் மகளிருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியினர் சிறப்பாக விளையாடி வருகின்றனர். நாளை நடைபெறவுள்ள இந்தியா - ஆஸ்திரேலியா போட்டியில் இந்திய மகளிரணி வெற்றி பெறவும், உலகக்கோப்பையை வெற்றி பெற எனது தனிப்பட்ட வாழ்த்துகளை அவர்களுக்கு தெரிவித்துக் கொள்வதாக அவர் தெரிவித்தார். நாளை காலை ஏழுமலையான் கோயிலில் குடும்பத்தினருடன் சச்சின் டெண்டுல்கர் சுவாமி தரிசனம் செய்ய உள்ளதால் அதற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான அதிகாரிகள் செய்து வருகின்றனர்.