விளையாட்டு

நேற்று 50 லட்சம் நிதியுதவி .. இன்று ஒரு மாதத்திற்கு 5000 பேருக்கு உணவு: அசத்தும் சச்சின்

webteam
கொரோனா நோய் தொற்று காரணமாக அமலில் உள்ள ஊரடங்கால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு மாதத்திற்கு 5000 பேருக்கு உணவளிக்க சச்சின் டெண்டுல்கர் முன் வந்துள்ளார்.
கொரோனா நோய்த் தொற்றுக்கு உலகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 90 ஐ கடந்து உள்ளது. இந்தச் செய்தி உலகம் முழுவதும் உள்ள மக்களின் மனதில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இறந்தவர்களின் எண்ணிக்கை இந்த வேகத்தில் உயர்ந்துள்ளது. இதுவரை  3,69,017 பேர் இந்தத் தொற்று பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர்.  இது ஒரு ஆறுதலான செய்தி.  உலக அளவில் 16,19,944 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இந்தியாவைப் பொறுத்தவரை 6761 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நோய்த் தொற்றிலிருந்து மக்களைக் காப்பாற்றப் பிரதமர் மோடி மக்களிடம் நிதி வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் நாட்டின் செலவினங்களைக் குறைப்பதற்காக நடவடிக்கைகளின் அவர் ஈடுபட்டுள்ளார். 
இந்நிலையில், ஒரு மாதத்திற்கு 5000 பேருக்கு உணவளிக்க சச்சின் டெண்டுல்கர் உறுதி அளித்துள்ளார். முன்னதாக, கொரோனா தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்திற்கு உதவுவதற்காக சச்சின் ரூ.50 லட்சத்தை நன்கொடையாக அளித்து இருந்தார். அதன் தொடர்ச்சியாக தற்போது இந்த தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இது சம்பந்தமான செய்தியை அப்னாலயா என்ற தன்னார்வ அமைப்பு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. தேவைப்படுபவர்களுக்காக தனது முயற்சியைச் செய்ததற்காக டெண்டுல்கருக்கு அந்த அமைப்பு நன்றி தெரிவித்துள்ளது. இதனை சச்சின் ரீ டிவீட் செய்துள்ளார்.
அதில் அவர், “எனது வாழ்த்துகள். ஏழைகளின் சேவையில் உங்கள் பணியைத் தொடருங்கள். உங்கள் நல்ல வேலையைத் தொடருங்கள்” என்று கூறியுள்ளார்.