விளையாட்டு

‘சச்சின், சேவாக், லாரா, யுவராஜ்’ - ஒரே தொடரில் களமிறங்கும் உலக நட்சத்திர வீரர்கள்

‘சச்சின், சேவாக், லாரா, யுவராஜ்’ - ஒரே தொடரில் களமிறங்கும் உலக நட்சத்திர வீரர்கள்

webteam

உலக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கிரிக்கெட் தொடரில் சச்சின் டெண்டுல்கர், பிரைன் லாரா உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரரான சச்சின் டெண்டுல்கர் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 18,426 ரன்களும், டெஸ்ட் போட்டிகளில் 15,921 ரன்களும் குவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற சச்சின் ஐபிஎல் தொடரில் சில ஆண்டுகள் விளையாடினார். இருப்பினும், 2013ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருடன் அவர் ஓய்வு பெற்றுவிட்டார்.

கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து சச்சின் ஓய்வு பெற்றுவிட்டாலும் அவ்வவ்போது ஏதாவது ஒரு ஸ்பான்ஸர் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறார். அந்த வகையில், ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிதி திரட்டும் வகையில் நடத்தப்பட்ட போட்டியில் அவர் பங்கேற்றார். காட்சிப் போட்டியில் சச்சின் விளையாடினால், அதிகமாக நிதித் திரட்ட முடியும் என்று ஆஸ்திரேலியாவின் பெண்கள் அணியைச் சேர்ந்த எல்லிஸி பெர்ரி சமூக வலைத்தளத்தில் கோரிக்கை விடுத்திருந்தார். அதனை ஏற்றுக்கொண்ட சச்சின் ஒரு ஓவர் விளையாடுவதாக ஒப்புக்கொண்டார். அதன்படி மஞ்சள் நிற சீருடையுடன் மீண்டும் ஆடினார் சச்சின்.

சச்சின் பேட்டிங்கை மீண்டும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான தருணமாக அமைந்தது. அதனால், மஞ்சள் உடையுடன் அவர் பேட்டிங் செய்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு மகிழ்ந்தனர். ரிக்கி பாண்டிங் தலைமையில் ஓர் அணியும், ஆடம் கில்கிறிஸ்ட் தலைமையில் மற்றொரு அணியும் தலா 10 ஓவர்கள் கொண்ட அந்தப் போட்டியில் விளையாடின. ரிக்கி பாண்டிங் அணிக்கு, சச்சின் டெண்டுல்கர் பயிற்சியாளராக இருந்தார்.

இந்நிலையில், சச்சின் டெண்டுல்கரை மீண்டும் களத்தில் காணும் வாய்ப்பு அவரது ரசிகர்களுக்கு கிடைத்துள்ளது. இந்த முறையும் சேவைக்காகவே அவர் களத்தில் இறங்கவுள்ளார். உலக சாலை பாதுகாப்பு தொடர்பாக மும்பையில் நடைபெறவுள்ள போட்டியில்தான் சச்சின் பங்கேற்கவுள்ளார். மார்ச் 7ஆம் தேதி துவங்கும் இந்த தொடரில் மொத்தம் 11 போட்டிகள் 15 நாட்களில் நடைபெறவுள்ளது. ஐந்து நாடுகளின் அணிகள் இதில் பங்கேற்கிறார்கள். இந்தியா லெஜெண்ட்ஸ், இலங்கை லெஜெண்ட்ஸ், ஆஸ்திரேலியா லெஜெண்ட்ஸ், தென்னாப்ரிக்கா லெஜெண்ட்ஸ், வெஸ்ட் இண்டீஸ் லெஜெண்ட்ஸ் ஆகிய 5 அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்கின்றன.

இந்தத் தொடரில் சச்சின் டெண்டுல்கர், பிரைன் லாரா, வீரேந்திர சேவாக், யுவராஜ் சிங், ஜாகீர்கான், சந்திரபால், பிரெட் லீ, பிரட் ஹாட்ஜ், ஜாண்டி ரோட்ஸ், முத்தையா முரளிதரன், திலகர்த்தனே தில்ஷான், அஜந்தா மெண்டீஸ் உள்ளிட்ட வீரர்கள் பங்கேற்கின்றனர்.