கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் அமல்படுத்தி நடப்பு ஐபிஎல் சீஸன் அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.
நோய் தொற்று பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை கட்டுப்பட்டு நடைமுறைகளை அமல்படுத்தியுள்ளது பிசிசிஐ.
குறிப்பாக கிரிக்கெட் உலகில் பந்தை ஷைன் செய்ய எச்சிலை பயன்படுத்துவது வழக்கம். கொரோனா பரவலால் அதற்கு இப்போது தடை போடப்பட்டுள்ளது. இருப்பினும் சமயங்களில் வீரர்கள் அதை மறந்து விடுகின்றனர்.
நேற்று நடைபெற்ற டெல்லி மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் மூன்றாவது ஓவரின் போது ஷார்ட் கவர் திசையில் ஃபீல்டிங் பணியை கவனித்து கொண்டிருந்த பெங்களூரு கேப்டன் கோலி, டெல்லி பேட்ஸ்மேன் பிருத்வி ஷா அடித்த ஷாட்டை தடுத்து, பந்தை பிடித்ததும் அதில் எச்சிலை பயன்படுத்தி ஷைன் செய்ய முயன்றார்.
இருப்பினும் கொரோனா விதிமுறைகள் அவரது நினைவிற்கு வர கடைசி நேரத்தில் அதை செய்யாமல் தவிர்த்து, சக வீரர்களை பார்த்து சிரித்த படி கடந்து சென்றார்.
கோலியின் செயலுக்கு ட்விட்டரில் ரியாக்ட் செய்துள்ளார் முன்னாள் இந்திய வீரர் சச்சின் “பிருத்வி ஷா அருமையான ஷாட்டை ஆடியிருந்தார். கிட்டத்தட்ட பந்தில் எச்சிலை பயன்படுத்த முயன்ற கோலி மில்லியன் டாலர் ரியாக்ஷனை கொடுத்தார். சில நேரங்களில் நம் உள்ளுணர்வுகளுக்கு நாம் ஆட்பட்டு விடுகிறோம்”.
ஐசிசி விதியின்படி பந்தில் எச்சிலை பயன்படுத்த தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த தவறை திரும்ப திரும்ப செய்யும் அணிகள் பேட்டிங் செய்கின்ற அணிக்கு ஐந்து ரன்கள் பெனால்டி கொடுக்க வேண்டுமெனவும் ஐசிசி சொல்லியுள்ளது.
கடந்த வரம் ராஜஸ்தான் அணி வீரர் உத்தப்பாவும் பந்தை ஷைன் செய்ய எச்சிலை பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.