தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட் டினத்தில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 502 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. மயங்க் அகர்வால் 215 ரன்கள் எடுத்தார். ரோகித் சர்மா 176 ரன்கள் எடுத்தார். தென்னாப்பிரிக்க அணி, முதல் இன்னிங்ஸில் 431 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. டீன் எல்கர் 160 ரன்களும், டி காக் 111 ரன்களும் எடுத்தனர். இந்திய தரப்பில் அஸ்வின் 7 விக்கெட்டுகளை சாய்த்தார்.
இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 323 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதன் மூலம் தென்னாப்பிரிக்க அணிக்கு 395 ரன்கள் இலக்கை இந்திய அணி நிர்ணயித்தது.
பின்னர் 2வது இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி, தொடக்கத்திலேயே டீன் எல்கர் விக்கெட்டை இழந்தது. அவர் விக்கெட்டை ஜடேஜா வீழ்த்தினார். நேற்றைய ஆட்ட நேர முடிவில் அந்த அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 11 ரன்கள் எடுத்திருந்தது. மார்க்ரம் 3 ரன்னுடனும் தியூனிஸ் டி புருயின் 5 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
கடைசி நாள் ஆட்டம் இன்று காலைத் தொடங்கியது. போட்டி தொடங்கிய சில நிமிடங்களிலேயே புருயின் விக்கெட்டை சாய்த்தார் அஸ்வின். இதன் மூலம் அதிவேகமாக 350 விக்கெட்டுகளை வீழ்த்தி அவர் சாதனை படைத்துள்ளார். அடுத்து முகமது ஷமியின் பந்துவீச்சில் அனல் பறந்தது. அவர் பவுமா (0), கேப்டன் டுபிளிசிஸ் (13), குயின்டன் டி காக் (0) ஆகியோரின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து சாய்த்தார். பின்னர், நிலைத்து நின்று ஆடிய தொடக்க ஆட்டக்காரர் மார்க்ரம் (39), பிலாண்டர் (0) கேசவ் மகாராஜ் (0) ஆகியோரின் விக்கெட்டுகளை ஒரே ஓவரில் தூக்கினார் ஜடேஜா. இதனால் அந்த அணி, 8 விக்கெட்டை இழந்து தடுமாறிக்கொண்டிருந்தது.
பின்னர் இணைந்த முத்துசாமியும் பீடிட்டும் நிதானமாக ஆடி, இந்திய பந்துவீச்சாளர்களின் பொறுமையை சோதித்தனர். பீடிட் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். அவர் 56 ரன்கள் எடுத்தபோது, ஷமியின் பந்துவீச்சில் போல்டானார். அடுத்து ரபாடா, முத்துசாமியுடன் ஜோடி சேர்ந்தார். 18 ரன்கள் எடுத்திருந்தபோது ரபாடா, ஷமியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால் அந்த அணி 191 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதையடுத்து இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
தென்னாப்பிரிக்க வீரர் முத்துசாமி 49 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய தரப்பில் முகமது ஷமி 5 விக்கெட்டுகளையும் ஜடேஜா 4 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.