தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடக்க இருக்கும் டி-20 தொடரில், இந்திய அணியில் தோனிக்கு வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் தோனி, உலகக் கோப்பைத் தொடருடன் ஓய்வு பெறுவார் என்று கூறப்பட்டது. ஆனால் அவர் ஓய்வை அறிவிக்கவில்லை. இளம் வீரர்களுக்கு வழிவிட்டு அவர் ஓய்வு பெற வேண்டும் என்று சில முன்னாள் வீரர்களும் ஓய்வு பெறத்தேவையில்லை என்றும் சில வீரர்களும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் தோனி, தனது எதிர் காலம் குறித்து மவுனமாக இருக்கிறார். இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அணியில் இருந்து தன்னை விடுவித்த தோனி, இந்திய ராணுவத்துடன் இணைந்து பணியாற்றினார். இந்நிலையில், அடுத்த மாதம் இந்தியா வரும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியுடனான தொடரில், தோனிக்கு இடம் கிடைக்காது என்று கூறப்படுகிறது.
இந்தியா வரும் தென்னாப்பிரிக்க அணி 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் பங்கேற்கிறது. இந்தத் தொடருக்கான இந்திய அணி வரும் 4 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணி, வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டி-20 தொடரை 3-0 என்ற கணக்கில் சமீபத்தில் கைப்பற்றியது. அதில் ஆடிய வீரர்களையே இதிலும் தொடர வைக்க, தேர்வு குழு முடிவு செய்துள்ளதாகவும் அதனால் தோனிக்கு வாய்ப்பு கிடைக்காது என்றும் கூறப்படுகிறது.
விக்கெட் கீப்பராக ரிஷாப் பன்டுக்கு அதிக வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் மாற்று வீரர்களாக சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.