இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி, 6 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் 3 போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரில் 3-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் 4-வது ஒரு நாள் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நியூ வான்டரர்ஸ் ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 289 ரன்கள் எடுத்தது. சிறப்பாக விளையாடிய ஷிகர் தவான் சதம் அடித்து அசத்தினார். அவர் 109 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். விராத் கோலி 75 ரன்கள் குவித்தார். தோனி 42 ரன்கள் எடுத்தார்.
பிறகு ஆட்டத்தைத் தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி, 7.2 ஓவரில், ஒரு விக்கெட்டுக்கு 43 ரன் எடுத்திருந்த போது மின்னல் மற்றும் மழை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டது. பின் 28 ஓவர்களில் 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என டக்வொர்த் லூவிஸ் முறைப்படி இலக்கு மாற்றியமைக்கப்பட்டது. முடிவில் தென்னாப்பிரிக்க அணி 25. 3 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கிளாசன் 27 பந்தில் 5 பவுண்டரி ஒரு சிக்சருடன் 43 குவித்தார்.
போட்டிக்குப் பின் தென்னாப்பிரிக்க கேப்டன் மார்க்ரம் கூறும்போது, ‘தொடர்ந்து வெற்றி பெற்று வந்த இந்திய அணியை தடுத்திருக்கிறோம். முதலில் அந்த அணியை 290 ரன்களுக்கு கட்டுப்படுத்தியதில் மகிழ்ச்சி. பயமின்றி துணிந்து ஆடினால் இலக்கை அடையலாம் என்பதுதான் இந்த போட்டி தந்த மெசேஜ். அடுத்தும் எங்கள் தாக்குதல் தொடரும். சிறந்த வெற்றி இன்னும் கிடைக்கவில்லை. ஒரு அடி முன்னேறி இருக்கிறோம்’ என்றார்.
இந்திய கேப்டன் விராத் கோலி கூறும்போது, ’இரண்டாவது பாதி ஆட்டம் ஒரு கட்டத்தில் டி 20 போட்டி போல் ஆகிவிட்டது. வீரர்கள் செட்டில் ஆகவில்லை. பந்து கொஞ்சம் ஈரமாக இருந்தது, ஸ்பின்னர்களுக்கு பந்துகள் கொஞ்சம் திரும்பின. அவர்கள் புது ஷாட்களை முயன்றது கைகொடுத்தது. ஆட்டத்தின் ஓவர்கள் குறைக்கப்பட்டதால் தென்னாப்பிரிக்காவுக்கு சாதகமாக அமைந்தது. அதை அவர்கள் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். அடித்து ஆடியே ஆக வேண்டும் என்ற சூழ்நிலை அவர்களுக்கு சாதகமாக அமைந்தது. இந்த வெற்றிக்கு எங்களை விட அவர்களே தகுதியானவர்கள். நாங்கள் பந்துவீசும் போது ஆடுகளத்தின் தன்மையும் வேகமாக மாறிவிட்டது. அதனால் போட்டி மாறிவிட்டது’ என்றார்.