குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணியின் ருதுராஜ் கெய்க்வாட் ஃபார்முக்கு வந்து அரைசதம் விளாச, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 169 ரன்களை குவித்தது.
ஐபிஎல் 2022 தொடரில் இன்று நடைபெற்ற 2வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. முதல் வெற்றியை தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டேபிள் டாப்பராக வலுவான நிலையில் உள்ள குஜராத் அணியுடன் மோதியது. காயம் காரணமாக ஹர்திக் பாண்டியாவிற்கு பதிலாக குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ரஷித் கான் கேப்டனாக வழிநடத்தினார். ஆப்கானிஸ்தான் வீரர் ஒருவர் ஐபிஎல் அணி கேப்டன் பதவியை ஏற்பது இதுவே முதல்முறை! டாஸ் வென்ற குஜராத் அணி பவுலிங்கை தேர்வு செய்தது.
சென்னை அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா ஆகியோர் களமிறங்கினர். முகமது ஷமி வீசிய 3வது ஓவரில் வெறும் 3 ரன்களை எடுத்த நிலையில் எல்.பி.டபுள்யூ ஆகி வெளியேறி அதிர்ச்சி அளித்தார் ராபின் உத்தப்பா. அடுத்து ஒரு பக்கம் ருதுராஜ் பொறுப்பாக ஆடிக் கொண்டிருக்க, மறுபக்கம் மொயின் அலி ஒரு ரன் மட்டுமே எடுத்து அல்ஷாரி ஜோசப் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி வெளியேறினார்.
அடுத்து வந்த ராயுடு, ருதுராஜுடன் இணைந்து நிதான ஆட்டத்தை ஆடத் துவங்கினார். இருவரும் ஏதுவான பந்துகளை மட்டும் எல்லைக் கோட்டுக்கு விரட்டி பொறுப்பாக ஆடினர். தொடர்ந்து திணறி வந்த ருதுராஜ் ஒருவழியாக அரைசதம் கடந்து நிலைத்து ஆடினார். ராயுடு அரைசதத்தை நெருங்கிய நிலையில் அல்ஷாரி ஜோசப் பந்துவீச்சில் 46 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். அடுத்து ருதுராஜ் கெய்க்வாட்-உம் 48 பந்துகளில் 73 ரன்கள் குவித்த நிலையில் யாஷ் தயால் பந்துவீச்சில் வெளியேறினார்.
டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட்களான ஷிவம் துபேவும், ஜடேஜாவும் ஜோடி சேர்ந்தனர். ஆனால் இருவரும் நிதானமாகவே ஆடியதால் ஸ்கோர் மந்தமாக நகரத் துவங்கியது. பெர்குசன் வீசிய கடைசி ஓவரில் 2 சிக்ஸர்களை ஜடேஜா விளாச, சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்களை குவித்தது. தற்போது 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடி வருகிறது குஜராத் டைட்டன்ஸ்.