துபாயில் நடைபெற்று வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்தது ராஜஸ்தான்.
அந்த அணிக்காக யாருமே எதிர்ப்பார்க்காத நிலையில் ஓப்பனிங்கில் பென் ஸ்டோக்ஸுடன் களம் இறங்கி, பேட்டிங்கில் பட்டையை கிளப்பினார் ராபின் உத்தப்பா. அது இந்த சீசனில் ராஜஸ்தான் அணி ஓப்பனிங்கில் மேற்கொண்ட நான்காவது மாற்றமாகும்.
இதற்கு முன்னர் ஓப்பனிங்கிங் பேட்ஸ்மேனாக களம் இறங்கி விளையாடியவர் உத்தப்பா. ஆனால் நடப்பு சீசனில் தொடக்கம் முதலே அவர் மிடில் ஆர்டரிலேயே தொடர்ச்சியாக களம் இறக்கப்பட்டு வந்தார்.
இந்நிலையில் பெங்களூரு அணியுடனான ஆட்டத்தில் ஓப்பனிங் செய்ய தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி உத்தப்பா 22 பந்துகளில் 41 ரன்களை குவித்தார். இதில் 7 பவுண்டரிகளும், ஒரு சிக்சரும் அடங்கும். பெங்களூரு வீரர் வாஷிங்க்டன் சுந்தர் வீசியர் ஒரே ஓவரில் நான்கு பவுண்டரிகளை அடித்திருந்தார் உத்தப்பா.
இந்த ஆட்டத்தின் மூலம் ‘நான் ஒரு அக்மார்க் ஓப்பனர்’ என்பதை தனது உடல் மொழியின் மூலமே சொல்லியுள்ளார் உத்தப்பா. இருப்பினும், உத்தப்பா கொடுத்த அதிரடியான தொடக்கத்தை பயன்படுத்திக் கொள்ள ராஜஸ்தான் அணி தவறிவிட்டது. சாஹல் தனது சுழல் மாயத்தால் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை சாய்த்துவிட்டார்.
முதல் விக்கெட்டான ஸ்டோக்ஸ் ஆட்டமிழக்கும் போது ராஜஸ்தான் அணி 5.4 ஓவரில் 50 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் 69 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. 16 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு அந்த அணி 133 ரன்கள் எடுத்தது. பட்லர் 24 (25) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.