சென்னை அணிக்கு எதிரானப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.
2022-ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி, கடந்த 26-ம் தேதி முதல் மும்பை மற்றும் புனே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதுவரை 21 சூப்பர் லீக் போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில், டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நடைபெறும் 22-வது சூப்பர் லீக் போட்டியில், சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் டூ பிளசிஸ்பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து ஜடேஜா தலைமையிலான சென்னை அணி பேட்டிங்கில் களமிறங்குகிறது.
நடப்பு சாம்பியனான சென்னை அணியை பொறுத்தவரை இதுவரை ஆடிய 4 போட்டிகளிலும் தொடர் தோல்வியை சந்தித்துள்ளது. புதிதாக கேப்டன் பதவியேற்றுள்ள ஜடேஜா தான், இதற்கு முக்கிய காரணமாக இருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது. இதனால் அந்த விமர்சனத்தை உடைக்கும் வகையில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் சென்னை அணி உள்ளது.
பெங்களூரு அணி முதல் ஆட்டத்தில் பஞ்சாப்பிடம் தோல்வியுற்றாலும், அடுத்தடுத்த ஆட்டங்களில் இந்த சீசனின் பலமான அணிகளாக கருதப்படும் கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகளையும், மும்பை அணியையும் வீழ்த்தி அசத்தியது. தற்போது ஹாட்ரிக் வெற்றியை தக்கவைத்து, 4-வது வெற்றியை பெறும் முனைப்பில் சென்னை அணியை எதிர்கொள்கிறது பெங்களூரு அணி.
தனது முன்னாள் அணியை டூ பிளசிஸ் எவ்வாறு வியூகம் வகுத்து வீழ்த்தப் போகிறார் என்பதே எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. ஹர்ஷல் படேல் சகோதரி இறப்பால் பயோ பபுளை விட்டு வெளியே சென்றுள்ளதால், அவருக்கு பதிலாக சுயாஷ் பிரபுதேசாயும், டேவிட் வில்லிக்கு பதிலாக ஜோஸ் ஹசில்வுட்டும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ்:
ருதுராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா, மொயீன் அலி, அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா (கேப்டன்), ஷிவம் துபே, எம்எஸ் தோனி (விக்கெட் கீப்பர்), டுவைன் பிராவோ, மகேஷ் தீக்ஷனா, கிறிஸ் ஜோர்டான், முகேஷ் சவுத்ரி
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்:
ஃபாஃப் டூ பிளசிஸ் (கேப்டன்), அனுஜ் ராவத், விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல், ஷாபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஜோஸ் ஹசில்வுட், வனிந்து ஹசரங்கா, முகமது சிராஜ், சுயாஷ் பிரபுதேசாய், ஆகாஷ் தீப்.