ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்த அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி, கார்டிஃபில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன் படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 342 ரன்கள் குவித்தது. ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்தின் அதிகபட்ச ஸ்கோர் இது. தொடக்க ஆட்டக்கரர் ஜேசன் ராய் 108 பந்துகளில் 120 ரன்கள் குவித்தார். இதில் 2 சிக்சர்களும் 12 பவுண்டரிகளும் அடங்கும். இது அவருக்கு 5-வது சதம். ஜாஸ் பட்லர் 70 பந்துகளில் 91 ரன்கள் எடுத்தார்.
(ஷான் மார்ஷ்)
பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 47.1 ஓவரில் 304 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து தோல்வியை தழுவியது.
அந்த அணியின் ஷான் மார்ஷ் அதிரடியாக ஆடி 116 பந்துகளில் 131 ரன்கள் குவித்து பிளங்கட் பந்துவீச்சில் வீழ்ந்தார். அடுத்து சுழல் பந்து வீச்சாளர் அகார் தாக்குப்பிடித்து 46 ரன்கள் எடுத்தார். இவர்களை தவிர மற்றவர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆனதால் அந்த அணி தோல்வி யை தழுவியது. இதன்மூலம் இங்கிலாந்து அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்தின் வேகப்பந்துவீச்சாளர் பிளங்கட் 4 விக்கெட்டுகளையும் ரஷித் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இங்கிலாந்து அணியின் ஜேசன் ராய் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் தொடரில் 2-0 என கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.