விளையாட்டு

டக்அவுட் ஆனதற்கு ராஜஸ்தான் அணி ஓனர் என் கன்னத்தில் அறைந்தார்- ராஸ் டெய்லர் அதிர்ச்சி தகவல்

ச. முத்துகிருஷ்ணன்

ஐபிஎல் 2022 சீசனில் டக் அவுட் ஆனதற்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர் தன்னை 3-4 முறை கன்னத்தில் அறைந்ததாக முன்னாள் நியூசிலாந்து அணியின் கேப்டன் ராஸ் டெய்லர் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ராஸ் டெய்லர் எழுதியுள்ள அவரது சுயசரிதை புத்தகம் ”ராஸ் டெய்லர்: பிளாக் அண்ட் ஒயிட் (Ross Taylor: Black & White)” பல்வேறு தரப்பிலும் சர்ச்சைகளை கிளப்பி பிரபலமாகி வருகிறது. ஐபிஎல் 2011 சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அவர் விளையாடிய போது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் நிகழ்ந்த ஒரு அதிர்ச்சி சம்பவத்தையும் அந்த சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார் ராஸ் டெய்லர்.

அந்த சுயசரிதையில், “எங்களுக்கு டார்கெட் 195. நான் டக் அவுட் ஆகி வெளியேறினேன். எங்கள் அணி இலக்கை நெருங்கவில்லை. தோல்வியடைந்தோம். அணி வீரர்கள், ஊழியர்கள், நிர்வாகத்தினர் அனைவரும் ஹோட்டல் மேல் தளத்தில் உள்ள பாரில் இருந்தனர். அப்போது ராஜஸ்தான் அணி உரிமையாளர்களில் ஒருவர் என்னிடம் வந்து ‘ராஸ். டக் அவுட் ஆவதற்காக நாங்கள் உங்களுக்கு ஒரு மில்லியன் டாலர்கள் கொடுக்கவில்லை’ என்று கூறி என் கன்னத்தில் 3-4 முறை அறைந்தார்.

அதன் பின் அவர் சிரித்தார். அவை அதிக வலி தந்த அறைகள் அல்ல. ஆனால் இது விளையாட்டு-நடிப்பு என்று எனக்கு தெரியவில்லை. அந்த சூழ்நிலையில் அதை நான் பிரச்சினையாக விரும்பவில்லை. ஆனால் பல விளையாட்டுகளில் இது நடப்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை.” என்று ராஸ் டெய்லர் குறிப்பிட்டுள்ளார்.