விளையாட்டு

பெஞ்சில் உட்கார்ந்து சப்ஸ்டிட்யூட் வீரராக ஆடிய ரொனால்டோ; மொராக்கோவிடம் தோற்றது போர்ச்சுகல்

பெஞ்சில் உட்கார்ந்து சப்ஸ்டிட்யூட் வீரராக ஆடிய ரொனால்டோ; மொராக்கோவிடம் தோற்றது போர்ச்சுகல்

webteam

2022 பிஃபா கால்பந்து உலகக்கோப்பையின் காலிறுதிப்போட்டியிலும் களமிறக்கப்படாமல் பெஞ்சில் அமரவைக்கப்பட்டுள்ளார் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. பின்னர் கடந்த போட்டியைப் போல் சப்ஸ்டிட்யூட்டாக களமிறக்கப்பட்டார்.

போர்ச்சுகல் கால்பந்தாட்ட வீரர் கிரிஸ்டியானோ ரொனால்டோ மீண்டும் மீண்டும் பேசுபொருளாக இருந்து கொண்டே இருக்கிறார். 37 வயதாகும் நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் ரொனால்டோ, போர்ச்சுகல் - சுவிட்ஸர்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் பெஞ்சில் அமரவைக்கப்பட்டார். ரொனால்டோவுக்கு பதிலாக களமிறக்கப்பட்ட கோன்கலோ ராமோஸ் ஹாட் ரிக் கோல் அடித்து அசத்தி 6-1 என்ற கணக்கில் அணியை வெற்றி பெற வைத்தார். ரொனால்டோ பென்சில் உட்கார வைக்கப்பட்டதை ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அத்துடன், ரொனால்டோவின் காதலியும் இன்ஸ்டாவில் தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தது வைரல் ஆனது.

முன்னதாக தென்கொரியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இரண்டு பெரும் தவறுகளைச் செய்திருந்தார் ரொனால்டோ. அதில் ஒன்று தென் கொரியா அணி கோல் அடிப்பதற்கான வாய்ப்பை வழங்கியது. மற்றொன்று கோல் அடிப்பதற்கான வாய்ப்பை தாமே தவற விட்டது. அப்போது ரொனால்டோவுக்கு பதிலாக மாற்று வீரரை சான்டோஸ் களமிறக்கியபோதே, ரொனால்டோ தனது உடல்மொழி மூலமாக அதிருப்தியை தெரிவித்தார். இதனால் கூட இந்த ஒரு போட்டியில் அவர் களத்துக்குள் இறக்கப்படவில்லை என்றும் விமர்சனங்கள் உள்ளன.

இந்நிலையில், மொரோக்கா - போர்ச்சுகல் அணிகளுக்கு இடையிலான காலிறுதிப் போட்டியில் ரொனால்டோ களமிறக்கப்படவில்லை. அவர் பெஞ்சில் மீண்டும் அமர வைக்கப்பட்டுள்ளார். சுவிட்ஸர்லாந்து அணிக்கு எதிராக விளையாடிய அதே அணி மீண்டும் களமிறங்கி உள்ளது. இருப்பினும், ஒரு சப்ஸ்டிட்யூட் வீரராக கடந்த போட்டியைப் போல் களமிறக்கப்பட்டார்.

இருப்பினும், போர்ச்சுக்கல் அணி 0-1 என்ற கணக்கில் மொராக்காவிடம் தோல்வியை தழுவியது. தொடக்கத்திலேயே மொரோக்கா வீரர் யூசப் என் நெஸ்ரி (Youssef En Nesyri) ஆட்டத்தின் 42வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். பின்னர், இரு அணியும் கோல் போடும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர். இருப்பினும் யாராலும் கோல் எதையும் அடிக்க முடியவில்லை. கடைசி நேரத்தில் போர்ச்சுகல் வீரர்கள் எவ்வளவோ முயன்று பார்த்தனர். கூடுதல் நேரமாக கொடுக்கப்பட்ட 8 நிமிடங்களில் கூட போர்ச்சுகலால் கோல் அடிக்க முடியவில்லை. கோல் போட பல வாய்ப்புகளை அவர் தவறவிட்டனர். 

இறுதியில் ஆப்பிரிக்காவின் முதல் நாடாக உலகக்கோப்பை கால்பந்து தொடரின் அரையிறுதிக்குள் மொராக்கா நுழைந்துள்ளது.

முன்னதாக, பலம் வாய்ந்த பிரேசில் அணி குரேஷியாவிடம் நேற்று நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் தோற்று வெளியேறியது. இன்று பலம் வாய்ந்த போர்ச்சுகல் அணி தோற்றுள்ளது. நட்சத்திர வீரர் ரொனால்டோ இல்லாமல் கடந்த போட்டியில் 6 - 1 கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அதனால், ரொனால்டோ இல்லாதது விமர்சனமாக எழவில்லை. ஆனால், இந்தப் போட்டியின் தோல்வி ரொனால்டோவை தொடக்கத்தில் இறக்காதது குறித்து நிச்சயம் விமர்சனங்களை எழுப்பும்