அடுத்தாண்டு நடைபெறும் கால்பந்து உலகக் கோப்பையே தான் கடைசியாக விளையாடு உலகக் கோப்பை என ரெனால்டோ அறிவித்துள்ள நிலையில், அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பையில் விளையாடுவாரா என்பதையே உறுதிப்படுத்தாமல் இருந்து வருகிறார்.
சமகாலத்தில் சர்வதேச கால்பந்து களங்கள் இருவரின் ஆட்டத்தை மெய்மறந்து ரசித்துக் கொண்டிருக்கின்றன. எதிரணி தற்காப்பு வீரர்களின் அரணைத் தகர்த்து கோல் வளையத்துக்குள் நேர்த்தியாக பந்தை உதைக்கும் மெஸ்ஸியின் கால்வித்தை தனிரகம். வேகம் மற்றும் துரிதம், அபாரமான டிரிப்ளிங், சக்திவாய்ந்த ஷாட்டுகள், கோல் வளையத்திற்குள் தலையால் முட்டி பந்தை செலுத்தும் நேர்த்தி என ரொனால்டோவின் சுறுசுறுப்பான ஆட்டத்திறன் மற்றொரு ரகம்.
போர்ச்சுகல் கேப்டன் ரொனால்டோ 40 வயதை தொட்டுவிட்டார். அர்ஜென்டினா கேப்டன் மெஸ்ஸி நாற்பதை எட்டும் நிலையில் இருக்கிறார். ஆனால், ஒரு பதின்ம வயது கால்பந்து வீரனுக்குரிய உத்வேகம் இருவரின் ஆட்டத்திலும் தெறிக்கிறது. மாதம் 150 கோடி ரூபாய்க்கும் மேல் வருமானம் ஈட்டுகிறார் ரொனால்டோ. 100 கோடி ரூபாயை ஒட்டி சம்பாதிக்கிறார் மெஸ்ஸி. இந்த நிலையில் ஓய்வு குறித்து இருவரும் அளித்துள்ள பதில்கள் சர்வதேச கால்பந்து ரசிகர்களிடம் பேசுபொருளாகியுள்ளது. போர்ச்சுகல் கேப்டனான ரொனால்டோ அடுத்தாண்டு நடைபெறும் உலகக் கோப்பையே தனது இறுதிக் கோப்பையாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், ஒரிரு ஆண்டுகளில் தன் ஓய்வு அறிவிப்பு இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
ரொனால்டோ தற்போது, தேசிய அணிக்காக 143 கோல்கள் அடித்து உலக சாதனையைத் தக்கவைத்துள்ளார். மறுபுறம், அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி, 2026 ஆம் ஆண்டு அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ நாடுகளில் நடைபெறவுள்ள உலகக் கோப்பையில் விளையாடுவாரா என்பதை அவர் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. அர்ஜென்டினா அணிக்கு தான் சுமையாக இருக்க விரும்பவில்லை என்று குறிப்பிட்டு. உடல் தகுதி மற்றும் அன்றைய மனநிலைக்கேற்பவே இறுதி முடிவை எடுக்கப் போவதாக மெஸ்ஸி தெரிவித்திருக்கிறார்.
ஆனால், களமிறங்கும் முடிவுக்கே மெஸ்ஸி கடைசியில் வந்து நிற்பார் என சர்வதேச கால்பந்து ரசிகர்கள் நம்புகின்றனர். மெஸ்ஸியும், ரொனால்டோவும் உலகக்கோப்பையில் களமிறங்கினால், 6 ஆவது முறையாக உலகக் கோப்பையில் விளையாடியவர்கள் என்ற சாதனைக்கு சொந்தக்காரர்கள் ஆவார்கள். அதனைக் காண சர்வதேச கால்பந்து களங்களும், கோடிக்கணக்கான ரசிகர்களின் கண்களும் காத்திருக்கின்றன.