விளையாட்டு

விக்கெட் வீழ்ச்சிக்கு மத்தியில் ரோகித் சதம்

விக்கெட் வீழ்ச்சிக்கு மத்தியில் ரோகித் சதம்

webteam

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 5வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர் ரோகித் ஷர்மா சதமடித்தார்.

இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 5வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி போர்ட் எலிசபெத்தில் நடைப்பெற்று வருகிறது. இந்தப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக தவான் - ரோகித் களமிறங்கினர். தென்னாப்பிரிக்க தொடரில் ரோகித் தொடர்ந்து ரன் குவிக்க தடுமாறி வருகிறார். இதனால் இந்தப்போட்டியில் தொடக்கம் முதலே நிதானத்தை கடைபிடித்து விளையாடினார். மறுமுனையில் அதிரடியாக விளையாடிய தவான் 23 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் களமிறங்கிய கோலியும் பொறுப்புடன் விளையாடினார். இதற்கிடையில் ரோகித் தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். ரோகித் 51 பந்துகளை எதிர்கொண்டு தனது அரைசதத்தை அடித்தார். கோலி டுமினியால் ரன் அவுட் செய்யப்பட்டார்.

இதன்பின்னர் களமிறங்கிய ரகானே 18 பந்துகளில் 8 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆகி வெளியேறினார். இதற்கிடையில் ரோகித் தனது 17வது சதத்தை பூர்த்தி செய்தார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இவருக்கு இது 2வது சதம். ரோகித் 96 ரன்கள் எடுத்திருந்தபோது ரபாடா வீசிய ஸ்ஷார்ட் பாலை தூக்கி அடித்தார். அற்புதமான அந்த கேட்சை தென்னாப்ரிக்க வீரர்கள் கோட்டை விட்டனர். இந்த கண்டத்தில் இருந்து தப்பிய பிறகே ரோகித் தனது சதத்தை பூர்த்தி செய்தார். ரோகித் 115 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 126 பந்துகளை சந்தித்த ரோகித் 11 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களை விளாசினார். பின்னர் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா டக் அவுட் ஆகி வெளியேறினார். இந்திய அணி 43 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் எடுத்துள்ளது.