முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டிக்காக, இலங்கை சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, பங்களாதேஷூடன் இன்று ஃபைனலில் மோதுகிறது.
இந்நிலையில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா, இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் இருவரிடம் சில சிங்கள வார்த்தைகளைக் கற்றுக்கொண்டார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகிறது. அந்த வீடியோவில் இலங்கை ரசிகர்கள் கயான் செனனாயக்கேவும் நிலாமும் கலந்துகொண்டனர். இவர்களை இலங்கை அணி, விளையாடும் போட்டிகளின் போது பார்த்திருக்க முடியும்.
இவர்களிடம் ரோகித் சர்மா, சில சிங்கள வார்த்தைகளைக் கற்றுக்கொண்டார். ரோகித், நிலாமிடம், ‘எப்படியிருக்கீங்க?’ என்று கேட்பதற்கு சிங்கள மொழியில் என்ன சொல்ல வேண்டும் என்று கேட்கிறார். அதற்கு நிலாம், ‘கோமதா’ என்கிறார். ’நன்றாக இருக்கிறேன்’ என்பதற்கு ‘குந்தாய்’ எனச் சொல்ல வேண்டும் என்கிறார்.
இதையடுத்து ரோகித், ‘என் பெயர் ரோகித் சர்மா’ என்பதை எப்படிச் சொல்ல வேண்டும் என்பதை கயானிடம் கேட்கிறார். அதற்கு, ‘மகே நம ரோகித் சர்மா’ என்கிறார் அவர். பிறகு ’இரண்டு கிரிக்கெட் ரசிகர்களுடன் இருக்கிறேன்’ என்பதை எப்படிச் சொல்ல வேண்டும் என்கிறார். அதற்கு அவர்கள், ’மம இன்னே ஸ்ரீலங்கா, கிரிக்கெட் 2 பேன்லக் எக்’ என்கிறார்கள். ‘உங்கள் ஆதரவை விரும்புகிறோம்’ என்பதை எப்படி சொல்ல வேண்டும் என்று கேட்கிறார் ரோகித். அதற்கு அவர்கள், ‘இந்திய கண்டாயம ஆதரே கர்னவ ஓவலாங்கே சப்போர்ட் எகட்ட’ என்கிறார்கள்.
பிறகு, உண்மையிலேயே சிங்களம் கஷ்டமான மொழி என்கிறார் ரோகித். பின், ‘டுதி’ (நன்றி) என்று நிறைவு செய்கிறார். இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள இந்த வீடியோ இணையத்தில் இது வைரலாகி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராத் கோலி தனது திருமண வரவேற்புக்கு காயன் செனனாயக்கேவுக்கு சிறப்பு அழைப்பு விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.