விளையாட்டு

'கடைசி 50 இன்னிங்ஸ்களில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை' - ரோகித் சர்மா மீது கம்பீர் பாய்ச்சல்

JustinDurai

ரோகித் சர்மா தனது கடைசி 50 சர்வதேச கிரிக்கெட் இன்னிங்ஸ்களில் ஒரு சதத்தை கூட அடிக்கவில்லை.

திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்ற இலங்கைக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் 317 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று சாதனை படைத்தது. இதற்கு முக்கிய காரணம் விராட் கோலி - சுப்மன் கில் ஆகியோர் தான். தொடக்க வீரர் சுப்மன் கில் 97 பந்துகளில் 116 ரன்களை விளாசினார். மற்றொருபுறம் விராட் கோலி 110 பந்துகளில் 166 ரன்களை விளாசி கடைசி வரை களத்தில் இருந்தார். இவர்களின் பேட்டிங் மகிழ்ச்சியளிக்கும் அதே வேளையில், ரோகித் சர்மாவின் நிலை கவலைக்குரியதாக இருக்கிறது. இதற்குக் காரணம் அவர் செய்துள்ள மோசமான ரெக்கார்ட் தான்.

நேற்றைய போட்டியில் 49 பந்துகளை சந்தித்த ரோகித் சர்மா  துரதிஷ்டவசமாக அரை சதத்தை கூட பூர்த்தி செய்யாமல் 42 ரன்களுக்கு அவுட் ஆகினார். நேற்றும் சதத்தை தவறவிட்டதால், ரோகித் தனது கடைசி 50 சர்வதேச கிரிக்கெட் இன்னிங்ஸ்களில் ஒரு சதத்தை கூட அடிக்கவில்லை. ஒருநாள் உலகக்கோப்பை தொடர் நெருங்கிவரும் சூழ்நிலையில் ரோகித்தின் ஃபார்ம் குறித்து பலரும் அதிருப்தியடைந்துள்ளனர்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர், ''நாம் ஒரே மாதிரி பேச வேண்டும். மூன்றரை ஆண்டுகளாக விராட் கோலி சதம் அடிக்கவில்லை. ஆனால் அவர் இப்போது தனது ஃபார்முக்கு திரும்பிவிட்டார். ரோகித் சர்மா தன்னைத் தானே உதைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். அவருக்கு இது கடினமானதாக இருக்கலாம். ரோகித் தனது கடைசி 50 இன்னிங்ஸ்களில் ஒரு சதத்தை கூட அடிக்கவில்லை. கடந்த முறை நடந்த ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் அந்த சதங்களை தவிர்த்துப் பார்த்தால் ரோகித்தின் ஆட்டத்தில் ஒரு விசேஷமும் இல்லை.

ரோகித் சர்மா நல்ல டச்சில் இருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை. இருப்பினும், அவர் இன்னும் கூடுதலாக உழைக்க வேண்டும். விராட் கோலி ஒருவழியாக தனது ஃபார்மைக் கண்டுபிடித்துவிட்டார். அதை அவர் தொடர்ந்து செய்ய வேண்டும். வரும் உலகக்கோப்பை தொடரில் விராட் கோலியின் இருப்பு முக்கியமானதாக இருக்கும்'' என்று கூறினார்.