தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சிலும் சதம் அடித்ததன் மூலம் ரோகித் ஷர்மா பல சாதனைகளை படைத்துள்ளார்.
தென்னாப்பிரிக்க அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. முதல் போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது. இதன் முதல் இன்னிங்சில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 502 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. மயங்க் அகர்வால், 215 ரன்களும் ரோகித் சர்மா 176 ரன்களும் எடுத்திருந்தனர். பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி, 431 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. டீன் எல்கர் 160 ரன்களும் குயின்டன் டி காக் 111 ரன்களும் எடுத்தனர். இந்திய தரப்பில் அஸ்வின் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் இரண்டாவது இன்னிங்சை இந்திய அணி தொடங்கியது. மயங்க் அகர்வால் 7 ரன்னில் கேசவ் மகராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் ரோகித் சர்மாவுடன் புஜாரா இணைந்தார். இருவரும் சிறப்பாக ஆடி வந்தனர். ரோகித் சர்மா மீண்டும் சதம் விளாசினார். அவர் 7 சிக்சர், 10 பவுண்டரிகளுடன் 127 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் முதல் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸ் ஆகிய இரண்டிலும் சதம் அடித்த 6ஆவது இந்தியர் என்ற பெருமையை பெற்றார்.
மேலும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தொடக்க ஆட்டகாரராக களமிறங்கி முதல் போட்டியிலேயே இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை ரோகித் ஷர்மா படைத்துள்ளார். அத்துடன் ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற உலக சாதனையையும் ரோகித் ஷர்மா படைத்துள்ளார். இவர் இந்தப் போட்டியில் முதல் இன்னிங்சில் 6 சிக்சர் மற்றும் இரண்டாவது இன்னிங்சில் 7 சிக்சர்கள் அடித்து மொத்தமாக 13 சிக்சர்கள் விளாசினார். இதற்கு முன்பு பாகிஸ்தானின் வாசிம் அகரம் ஒரே டெஸ்ட் போட்டியில் 12 சிக்சர்கள் அடித்தது சாதனையாக இருந்தது இதனை ரோகித் ஷர்மா தற்போது முறியடித்துள்ளார். அதேபோல இந்தியா சார்பில்நவ்ஜோத் சிங் சித்து ஒரே டெஸ்ட் போட்டியில் 8 சிக்சர்கள் விளாசியிருந்தது சாதனையாக இருந்தது. ரோகித் ஷ்ரமா இதனை முறியடித்துள்ளார்.
அத்துடன் இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்த இரண்டாவது இந்திய தொடக்க வீரர் என்ற பெருமையையும் ரோகித் ஷர்மா பெற்றுள்ளார். இதற்கு முன்பு சுனில் கவாஸ்கர் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி மூன்று முறை இரண்டு இன்னிங்சிலும் சதம் கடந்து அசத்தியுள்ளார். இந்தியா சார்பில் ஏற்கெனவே விஜய் ஹசாரே, சுனில் கவாஸ்கர்(3), ராகுல் திராவிட்(2), விராட் கோலி, ரஹானே ஆகியோர் இரண்டு இன்னிங்சிலும் சதம் கடந்து அசத்தியுள்ளனர். தற்போது இந்தப் பட்டியலில் ரோகித் ஷர்மா இணைந்துள்ளார். இதில் கவாஸ்கர் மூன்று முறையும் திராவிட் இரண்டு முறையும் இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.