விளையாட்டு

பயிற்சி ஆட்டத்தில் ரோகித் சர்மா டக் அவுட்!

webteam

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் ரோகித் சர்மா டக் அவுட் ஆகி ஏமாற்றினார். 

இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் லெவன்- தென்னாப்பிரிக்கா இடையிலான 3 நாள் பயிற்சி கிரிக்கெட் போட்டி ஆந்திராவில் உள்ள விஜயநகரத்தில் நேற்று முன்தினம் தொடங்க இருந்தது. மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் ஒரு பந்து கூட
வீசப்படாமல் கைவிடப்பட்டது. 2-வது நாளான நேற்று ஈரப்பதம் காரணமாக போட்டி தாமதமாக தொடங்கியது.

முதலில் ஆடிய தென்னாப்பிரிக்க அணி, 6 விக்கெட் இழப்புக்கு 279 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. அந்த அணி யில் மார்க்ரம் சதம் அடித்தார். பவுமா 87 ரன்கள் எடுத்தார். பின்னர் இந்திய வாரிய தலைவர் அணி களமிறங்கியது. 

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் சரியாக ஆடாததால், அவருக்குப் பதிலாக மயங்க் அகர்வாலுடன் ரோகித் சர்மாவை தொடக்க வீரராக களமிறக்க, அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதற்கான பயிற்சியாக, இந்த மூன்று நாள் ஆட்டத்தில் ரோகித் இறங்கினார். ஆனால் சந்தித்த இரண்டாவது பந்திலேயே அவர் ஒரு ரன் கூட எடுக்காமல் பிளாண்டர் பந்துவீச்சில் கிளாசனிடம் கேட்ச் கொடுத்து ஏமாற்றினார்.  அடுத்து வந்த ஈஸ்வரன், 13 ரன்னில் ரபாடா பந்துவீச்சில் ஆட்ட மிழந்தார். மதிய உணவு இடைவேளை வரை இந்திய அணி, 2 விக்கெட் இழப்புக்கு 23 ரன்கள் எடுத்துள்ளது.