சென்னையில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது பந்துவீசிய ரோகித் சர்மா, சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் ஸ்டைலில் ஓடி வந்தது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி மிகச் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறது. இதில் அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட் மிகப்பிரமாதமாக விளையாடி இரட்டைச் சதமடித்தார். மேலும் டோம் சிப்லே மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோரும் அரை சதம் விளாசினர்
சென்னை மைதானம் இந்திய பவுலர்களுக்கு உதவும் வகையில் இல்லை. வேகப்பந்து வீச்சும், சுழற்பந்துவீச்சும் எடுபடவில்லை என்பதால் விக்கெட்டுகள் எடுக்க இந்திய பவுலர்கள் திணறினர். அஸ்வின், ஷபாஸ் நதீம், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் போராடினர். பும்ராவுக்கும், இஷாந்த் சர்மாவுக்கும் கூட அவ்வளவு எளிதாக இருக்கவில்லை.
இதனால் பகுதி நேர பந்துவீச்சாளரான ரோகித் சர்மாவை "ஆஃப் ஸ்பின்" போட அழைத்தார் கேப்டன் விராட் கோலி. அப்போது சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் ஸ்டைலில் ஓடி வந்து பந்து வீசினார் ரோகித் சர்மா. இப்போது சமூக வலைத்தளத்தில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.