இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.
அண்மையில் விராட் கோலி தலைமையில் மூன்று பார்மெட்டுக்குமான அணியை அறிவித்தது பிசிசிஐ. அதில் ‘ஹிட்மேன்’ ரோகித் ஷர்மாவின் பெயரை டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என எந்தவொரு பார்மேட்டிலும் சேர்க்காமல் இருந்தது பிசிசிஐ.
ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் இது தொடர்பாக கேள்வி எழுப்பியிருந்தனர். காயம் காரணமாக தான் அவர் அணியில் சேர்க்கப்படவில்லை என்று காரணம் சொல்லப்பட்டது. அணி அறிப்பின் போது ரோகித் சர்மா சில போட்டிகளில் விளையாடாமல் ஓய்வில் இருந்தார். ஆனால், பயிற்சியில் தீவிரம் காட்டி மீண்டும் கடைசி லீக் மற்றும் பிளே ஆஃப் சுற்றில் விளையாடினார். ஐபிஎல் தொடரில் விளையாடும் ரோகித் சர்மாவுக்கு ஏன் இந்திய அணியில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை என பலரும் கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில், ஆஸ்திரேலிய தொடருக்கான டெஸ்ட் தொடரில் மட்டும் ரோகித் சர்மா சேர்க்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், “மருத்துவர்கள் ரோகித்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அவரது உடற்தகுதி குறித்தும் அணியின் தேர்வு குழுவுக்கு தொடர்ந்து தகவல் கொடுக்கப்பட்டு வருகிறது. அவர் முழு உடற்தகுதி பெறும் வகையில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ரோகித்துக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் டெஸ்ட் தொடருக்கான அணியில் அவர் இணைக்கப்பட்டுள்ளார். இது தொடர்ப்பாக ரோகித்திடமும் பேசியுள்ள்ளோம்” என தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் ரோகித் விளையாடுவது உறுதியாகி உள்ளது. விராட் கோலி கடைசி மூன்று போட்டிகளில் விளையாடாத சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், அந்த மூன்று போட்டிகளுக்கும் ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுவார் என்றே தெரிகிறது. முதலில் வெளியிட்ட லிஸ்டில் ரோகித் சர்மா பெயர் இல்லாத நிலையில், தற்போது மட்டும் ரோகித் பெயர் இணைக்கப்பட்டுள்ளது கேள்விகளை எழுப்பியுள்ளது.